Published:Updated:

'26/11' உலகை உலுக்கிய மும்பை தாக்குதல்: 13 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீப்பற்றி எரியும் தாஜ் ஹோட்டல்
தீப்பற்றி எரியும் தாஜ் ஹோட்டல்

மும்பையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் காயம் இன்னும் ஆறாமல் இருக்கிறது.

2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதியை மும்பை மக்களால் எப்போதும் மறக்க முடியாது. யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தென் மும்பையின் முக்கிய இடங்களில் புகுந்து சரமாரியாகச் சுட்டனர். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அந்தத் தீவிரவாதிகள் மும்பைக்கு அருகில் உள்ள கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். தெற்கு மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் போன்ற இடங்களில் தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.

தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் பாதுகாப்பு படை
தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் பாதுகாப்பு படை

இரவு 9:30 மணிக்கு படகில் வந்து இறங்கியவுடன் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். 10 தீவிரவாதிகளும் நவீன முறையில் பயிற்சியளிக்கப்பட்டு தற்கொலைப் படையினராக அனுப்பிவைக்கப்பட்டனர். மும்பை போலீஸார் தீவிரவாதிகளை எதிர்த்து போராடினர். ஆனால் போலீஸார் எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் வழக்கமாக ஓரிரு தீவிரவாதிகள்தான் இருப்பார்கள் என்று கருதிச் சென்றனர். இதனால் மும்பை போலீஸார் முக்கிய அதிகாரிகளை இந்த சண்டையில் இழந்தனர். தேசிய பாதுகாப்பு படை மற்றும் மும்பை போலீஸார் இணைந்து வெறும் 10 தீவிரவாதிகளை எதிர்த்து 3 நாள்கள் போராடினர். அதன் பிறகே ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவருக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து புனே சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

அஜ்மல் கசாப்பை சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் தனது உயிரைப் பணயம்வைத்து பிடித்தார். தன்னிடமிருந்த லத்தியை மட்டும் ஆயுதமாகவைத்து பிடித்தார். கசாப், சப் இன்ஸ்பெக்டரை ஐந்து ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டார். அப்படியும் தீவிரவாதியை விடாமல் பிடித்தார். இறுதியில் மற்ற போலீஸார் வந்து கசாப்பைப் பிடித்தனர். இதில் கசாப்பைப் பிடித்த சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் உயிர்த் தியாகம் செய்தார். தீவிரவாதிகளின் மூன்று நாள் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 238 பேர் காயமடைந்தனர்.

1993-ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் துணையுடன் மும்பையில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக மும்பையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக 2008-ம் ஆண்டு தாக்குதல் கருதப்படுகிறது. 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ்தேவ் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கின்றனர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன்வரவில்லை. தீவிரவாதிகளுக்குத் தொழில்நுட்ப ஆதரவு கொடுத்து, தாக்குதலை நடத்த உதவியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு. அதை நிரூபிக்கும் வகையில் தீவிரவாதிகளின் தாக்குதல் இருந்தது.

தமிழ்செல்வம்
தமிழ்செல்வம்

இது குறித்து அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், ``தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ராணுவத் தாக்குதல் போன்று இருந்தது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மட்டும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. எப்போது என்பது தொடர்பாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 1993-ம் ஆண்டிலிருந்தே மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சத்தில் இருந்துவருகிறது” என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தனி தீவிரவாத தடுப்புப் படை அமைக்கப்பட்டது. மும்பை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உள்துறைச் செயலாளராக பதவியேற்ற சந்திரா ஐயங்கார் இது குறித்துக் கூறுகையில், ``இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டனர். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு `ஃபோர்ஸ் ஒன்’ படை உருவாக்கப்பட்டதோடு, பாதுகாப்பை பலப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

மும்பை: ரயில் நிலையத்தில் பையை திருடிக்கொண்டு ஓடிய திருடன்! - விரட்டிச் சென்ற பயணிக்கு நேர்ந்த கதி

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு மும்பை தீவிரவாதிகளின் எந்தவிதமான தாக்குதலையும் இதுவரை சந்திக்கவில்லை. சம்பவத்தின்போது, இப்போது மும்பையில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தமிழ்செல்வம் தீவிரவாதத் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``எனக்கு சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி அனுப்பும் பணி நடந்துவருகிறது. நான் கடைசி ரயிலில் சரக்குகளை ஏற்றி அனுப்பிவிட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தபோது ரயில் நிலையத்தின் முன்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயணிகள் கூச்சலிட்டபடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர். நானும் என்னுடைய ஊழியர்களும் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்” என்று கூறினார். மகாராஷ்டிராவிலுள்ள ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு