Published:Updated:

மகாராஷ்டிரா: வனப்பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டை! - 26 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரோந்துப் பணியில் சிறப்புப் படை
ரோந்துப் பணியில் சிறப்புப் படை

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் 26 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்கள் சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டி இருக்கின்றன. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் எப்போதும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மகாராஷ்டிரா எல்லையையொட்டி தெலங்கானா மாநிலமும் இருக்கிறது. இதனால் நக்சலைட்கள் ஒரு புறம் போலீஸாரின் தேடுதல் வேட்டை அதிகமாக இருந்தால் உடனே பக்கத்து மாநிலத்துக்குள் நுழைந்துவிடுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் தனோரா என்ற இடத்தில் உள்ள கயரபத்தி வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் வந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் தனிப்படை அந்தப் பகுதிக்கு சென்று நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகள் போலீஸாரைப் பார்த்ததும் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

ரோந்துப் பணியில் சிறப்புப் படை
ரோந்துப் பணியில் சிறப்புப் படை

இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் போலீஸாரின் கை ஓங்கியிருந்ததால் போலீஸாரை எதிர்த்து சண்டையிட முடியாமல் நக்சலைட்டுகள் ஆயுதங்கள் மற்றும் இறந்தவர்களை அப்படியே போட்டுவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் 26 நக்சலைட்டுகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து கட்சிரோலி மாவட்ட எஸ்.பி அங்கித் கோயல் அளித்த பேட்டியில், ``கட்சிரோலி மாவட்டத்திலுள்ள கயரபத்தி வனப்பகுதியில் நக்சலைட்டுகளுடன் நடந்த பல மணி நேரச் சண்டையில் 26 நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.

நக்சலைட்டுகளுடனான சண்டையில் மூன்று போலீஸார் காயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கே அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இதே மாவட்டத்தில் ஏழு பெண்கள் உட்பட 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு