தண்ணீர் தர மறுத்த சந்திரசேகரராவை சிறையிலடைக்க வேண்டும்: கிரண்குமார் ரெட்டி

நகரி: தண்ணீர் தர மறுத்த சந்திரசேகரராவை சிறையிலடைக்க வேண்டும் என்று கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கியபோது, சீமாந்திர பகுதி தண்ணீர் தேவைக்காக போலாவரம் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

ஆனால், தெலுங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலாவரம் நீர்த்தேக்கத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட விடமாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறி வருகிறார்.

சந்திரசேகரராவின் இந்த பேச்சுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி கண்டனம் தெரிவித்து கூறும்போது, ''போலாவரம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சந்திரசேகரராவ் கூறுகிறார். தண்ணீர் என்ன அவர் வீட்டுக் குழாயா? மத்திய அரசு கேட்டும், நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் தரமாட்டேன் எனக்கூறும் சந்திரசேகரராவ் சிறையில் இருக்க வேண்டிய நபர். அவரை சிறையில் அடைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்களை நம்ப மாட்டார்கள். தெலுங்கானா கொடுத்த விதமே தவறானது. இது தொடர்பாக வழக்கில் நாங்கள் ஜெயிப்போம். மீண்டும் ஆந்திரா ஒன்றாக இணையும். மேலும், சந்திரசேகரராவ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!