Published:Updated:

`ஊரடங்கு; பழைமையான படகு; 2 மூட்டை அரிசி!' - அதிகாரிகளை மிரளவைத்த 1000 கி.மீ கடல் பயணம்

படகு
படகு ( representational image )

கொரோனா ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத 27 தொழிலாளர்கள், கடல்வழியாக சுமார் 1000 கி.மீ பயணித்து தங்கள் ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரடங்கு, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அப்போதும் இந்தியாவில் வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாம் கட்டமாக, வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational Image

முதல் கட்ட ஊரடங்கின்போதே டெல்லியில் தங்கி பணிபுரிந்து வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது, பின்னர் அனைவரும் வழியிலேயே தடுக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது வரை அந்தந்த மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வசதி செய்துதருகிறது.

இதேபோல், சென்னையில் வசித்துவந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் இணைந்து, கடல்வழியாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ஒடிசா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 27 பேர், சென்னையின் கடல் எல்லைப் பகுதியில் வசித்துவந்துள்ளனர். முதல் கட்ட ஊரடங்கு முழுவதும் அவர்கள் சிரமப்பட்டு இங்கு இருந்துள்ளனர். மீண்டும் இரண்டாம்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத மீனவர்கள், தொழிலாளர்கள் சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல கடல் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மீன்பிடி படகு
மீன்பிடி படகு
representational image

இதற்காக, ஒரு நபருக்கு 7000 ரூபாய் வீதம் என மொத்தம் ரூ. 1.73 லட்சம் பணத்தைச் சேர்ந்து, ஒரு மீனவரிடம் இருந்து மூன்று வருடங்கள் பழைமையான 9 எச்.பி திறன் கொண்ட இன்ஜின் படகை வாங்கியுள்ளனர். பின்னர், அந்த 27 பேரும் படகு மூலம் சுமார் 1080 கி.மீ கடல் மார்க்கமாக ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். எப்போதும் ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தியக் கடற்படையினர் கண்ணில் சிக்காமல், ஐந்து நாள்கள் பயணித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை, ஒடிசா -ஆந்திரா எல்லை கடற்பகுதியில் இவர்களைப் பார்த்த காவல்துறையினர், அனைத்து தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தி முகாம்களில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

`இந்தியாவில் ஊரடங்கால் 4 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதிப்பு!’ - உலக வங்கி

இந்த விவகாரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தி டெலிகிராஃப் ஊடகத்திடம் பேசியுள்ள ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலங்கே, “சென்னையிலிருந்து மரப் படகில் வந்துகொண்டிருந்த 27 மீனவர்களும் திங்கள்கிழமை அதிகாலை ஒடிசா- ஆந்திரா எல்லையான இச்சாபுரம் அருகே உள்ள டங்கரு கடற்கரையை அடைந்தபோது, நாங்கள் அவர்களைத் தனிமைப்படுத்தினோம். படகில் பயணித்தவர்களில் 10 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

கடல்
கடல்
representational image

இவரையடுத்து பேசியுள்ள ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களில் ஒருவரான மீனவர் கிருஷ்ணா, ‘ சென்னையில் கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதனால் அங்கு இருக்க எங்களுக்குப் பயமாக இருந்தது. எனவே, எங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பினோம். ஆனால், எங்கு தேடியும் போக்குவரத்து வாகனம் கிடைக்கவில்லை. இறுதியாக எங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்து, கடல் வழியைத் தேர்ந்தெடுத்தோம். எங்களிடம் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்துகொண்டிருந்தது. நாங்கள் பெரும் சிக்கலில் தள்ளப்பட்டோம். அதனால் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

`நன்றியுணர்வைக் காட்ட நினைத்தோம்..!’ - அரசுப் பள்ளியை ஜொலிக்க வைத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
எங்கள் பயணம் மிகவும் சீராக இருந்தது. நட்சத்திரம் மற்றும் செல்போனின் உதவியுடன் வழியை அறிந்து பயணித்தோம்.
கடல்வழியாகப் பயணித்த தொழிலாளர்

நாங்கள் ஏப்ரல் 15-ம் தேதி ஊருக்குச் செல்ல முடிவெடுத்து ஒருவருக்கு ஒருவர் போனில் பேசி ஆலோசனை நடத்தினோம். அதே மாலை படகை வாங்கி, இரவு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், 9 மணிக்கு படகு நங்கூரமிட்டிருந்த கரையை அடைந்தோம். காவல்துறையினரிடம் பிடிபடுவதைத் தவிர்க்க நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக படகு இருக்கும் இடத்துக்குச் சென்றோம். எங்கள் பயணத்துக்காக இரண்டு மூட்டை அரிசி, ஒரு கிலோ தக்காளி, ஒரு முழு காஸ் சிலிண்டர், 350 லிட்டர் டீசல், 300 லிட்டர் குடிநீரை எடுத்துக்கொண்டு அதேநாள் இரவு சரியாக 10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டோம்.

பயண வழி
பயண வழி
representational image

எங்கள் 27 பேருக்கும் அந்தப் படகு போதவில்லை. இருந்தும் வேறு வழியில்லாமல் அதில் பயணிக்கத்தொடங்கினோம். கடற்படையினரிடம் பிடிபடுவோம் என்ற அச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது, கடவுளின் அருளால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்கள் பயணம் மிகவும் சீராக இருந்தது. நட்சத்திரம் மற்றும் செல்போனின் உதவியுடன் வழியை அறிந்து பயணித்தோம். எங்களுடன் ஒரு பேட்டரியையும் எடுத்துச் சென்றோம், அது மிகவும் உதவியாக இருந்தது. நாங்கள் கடல் வழியாகப் பயணிப்பது இச்சாபுரத்தில் உள்ள எங்கள் உறவினர்களுக்குத் தெரியும், அவர்கள்தான் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

‘காசு இல்லாமகூட கிராமத்துல வாழ்ந்திடுவோம்.. ஆனா இங்கு?!’- புலம்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

அதன்பேரில், நாங்கள் கடற்கரையை அடைவதற்கு முன்பாகவே காவலர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். பின்னர் அனைவரையும் தனிமைப்படுத்திக் கண்காணித்தனர். சென்னையில் ஒரு மாதத்துக்கு 40,000 ரூபாய் வரை சம்பாதித்து வந்தோம். ஆனால், பணத்தைவிட எங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது. அதனாலேயே எங்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாரானோம்” என முழுப் பயணத்தைப் பற்றியும் விளக்கியுள்ளனர் தொழிலாளர்கள்.

News Credits : Telegraph

அடுத்த கட்டுரைக்கு