Published:Updated:

`ஆன்லைன் கவுன்சிலிங்; ஒரேநாளில் 276 டாக்டர்கள் நியமனம்!' -பிளான் சி-யை கையிலெடுத்த கேரளா #corona

அமைச்சர் சைலஜா
அமைச்சர் சைலஜா

தொடர்ந்து வைரஸ் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில், அவசரத் திட்டமாக பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என மூன்று திட்டங்களை அம்மாநில அரசு தயாரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாள்களில் மட்டும், 24 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், நேற்று ஒரேநாளில் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக, காசர்கோடு மாவட்டம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புதிதாகப் பாதித்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தமாக காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

மாநிலம் முழுவதும் மிகக் கடுமையான பாதிப்பில் இருப்பதால், காசர்கோடு மாவட்டத்தில் யாராவது வெளியே நடமாடினால் கைதுசெய்யவும் நடவடிக்கையை எடுத்துள்ளது கேரள அரசு. தொடர்ந்து வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில் அவசரத் திட்டமாக பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என மூன்று திட்டங்களை அம்மாநில அரசு தயாரித்துள்ளது.

ஜனவரி கடைசி வாரத்தில், சீனாவின் வுஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்கள் மூலம் கொரோனா வைரஸ் நோய் முதன்முதலில் கேரளாவுக்கு வந்தபோது, கேரள அரசு பிளான் ஏ மற்றும் பிளான் பி-யைத் தயாரித்தது. பிளான் ஏ-ன்படி உடனடியாக 50 அரசு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்கத் தயாராக இருந்தது. குறைந்தபட்சம் 974 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டன.

மேலும் தேவைப்பட்டால், கூடுதலாக 242 படுக்கைகள் பயன்படுத்த அடையாளம் காணப்பட்டன. பிளான் பி-யில் 71 அரசு மருத்துவமனைகள் மற்றும் 55 தனியார் மருத்துவமனைகள் COVID-19 ஐ சமாளிக்கத் தயாராக இருக்கும்படி பார்க்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 1408 ஆக உயர்ந்தது. மூன்று மாணவர்கள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவியிருந்தால், அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காக அப்போதே இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன.

கொரோனா
கொரோனா

ஆனால், மூன்று மாணவர்களும் விரைவாகக் குணமடைந்ததுடன், அவர்கள் மூலமாக மற்றவர்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதால், கேரள அரசு நிம்மதிப்பெருமூச்சு விட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே சுகாதாரத்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இத்தாலியிலிருந்து வந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், தங்களது பயணத்திட்டங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறுத்ததுடன் பத்தினம்திட்டாவில் உள்ள தங்கள் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கும் கொரோனா தொற்றைப் பரப்பினர். அதன் காரணமாக, தற்போது கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஐ தொட்டுள்ளது. இதனால் தற்போது அம்மாநில அரசு பிளான் சி என்ற திட்டத்தைத் தயார்செய்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

பிளான் சி -யின்படி, 81 அரசு மற்றும் 41 தனியார் மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் 122 மருத்துவமனைகளில் 3,028 தனிமைப் படுக்கைகள் அமைக்கப்படும். இதற்கான தனியார் மருத்துவமனைகளை மாநில சுகாதாரத்துறை ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளது. அந்த மருத்துவமனைகளில் எமெர்ஜென்சி அல்லாத வார்டுகளை அகற்றிவிட்டு, அதைத் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் அமைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பணிகளைச் செயல்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

`ஆன்லைன் கவுன்சிலிங்; ஒரேநாளில் 276 டாக்டர்கள் நியமனம்!' -பிளான் சி-யை கையிலெடுத்த கேரளா #corona

``பொதுமக்கள் எச்சரிக்கையாகி சமூக இடைவெளியைப் பின்பற்றினால், பிளான் பி-யில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடலாம். ஆனால், ஒரு சமூகப் பரவல் எழுந்தால் மற்றும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டால், நாங்கள் பிளான் சி-க்கு செல்வோம்" என்று ஏற்கெனவே அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்தது போலவே, நேற்று ஒருநாள் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட, தற்போது பிளான் சி-யை கையிலெடுத்துள்ளது. ஏற்கெனவே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க, தற்போது புதிதாக 276 டாக்டர்களை ஒரேநாளில் பணிநியமனம் செய்துள்ளது. ஆன்லைன் மூலம் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதுடன், அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கவுன்சிலிங்கும் நடத்தியுள்ளது. மருத்துவர்கள் மட்டுமல்ல, செவிலியர்கள் உட்பட பல்வேறு மருத்துவத்துறை பணியாளர்களை ஒரே நாளில் நியமித்து அதிரடி காட்டியுள்ளது கேரள அரசு.

அடுத்த கட்டுரைக்கு