Published:Updated:

ஒரே நாளில் 28 பேருக்கு தொற்று... தீவிர பாதிப்பு! -கண்காணிப்பு வளையத்தில் காசர்கோடு

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தனி நபர்களின் வாகனங்களை இயக்கலாம். அரசு அலுவலகங்களில் தேவையான முன் நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்படலாம். பெரும்பாலும் மக்கள் வெளியே வரவேண்டாம்.

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் காசர்கோடு மாவட்டம் மிகக்கடுமையான பாதிப்பில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் லாக்-டவுண் அமல்படுத்தப்பட்டதுடன், காசர்கோடு மாவட்டத்தில் யாராவது வெளியே நடமாடினால் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இப்போது, கண்ணூரைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளார். அவருடன் சேர்த்து இதுவரை நான்குபேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

புதிதாகப் பாதித்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஐந்துபேர் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். இதில் 25 பேர் துபாயில் இருந்து நாடு திரும்பியவர்கள். கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், மார்ச் 31 வரை லாக்-டவுண் ஏற்படுத்தப்படுகிறது. மாநில எல்லைகள் மூடப்படும். அரசு, தனியார் பஸ்கள் ஓடாது. தனி நபர்களின் வாகனங்களை இயக்கலாம். அரசு அலுவலகங்கள், தேவையான முன் நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்படும். பெரும்பாலும் மக்கள் வெளியே வரவேண்டாம். அவசியம் ஏற்பட்டால் பிறரிடமிருந்து இடைவெளிவிட்டு இருக்க வேண்டும்.

கொரோனா
கொரோனா

மாநிலம் முழுவதும் 64,320 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அதில் 63,937 பேர் வீடுகளிலும், 383 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். காசர்கோடு மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களைவிட தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு யாராவது அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினால், கைதுசெய்யப்படுவதுடன் கடும் அபராதம் விதிக்கப்படும்.

வெளி மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்துக்கு வருபவர்கள், 14 நாள்கள் தனியாக வைத்து கண்காணிக்கப்படுவார்கள். தண்ணீர், மின்சாரம், அவசிய பொருள்கள் விற்பனை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டுத் தனிமை கண்காணிப்பில் இருப்பவர்களின் மொபைல் லொக்கேஷன் எடுக்கப்படும். எனவே, அவர்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம். அதுமட்டுமல்லாது, அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள், அவர் வெளியேறினால் தகவல் கூறவேண்டும். தனி கண்காணிப்பில் உள்ளவர்களின் பட்டியல் அந்தப் பகுதி வாசிகளுக்கு வழங்கப்படும்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கொரோனாவைத் தடுக்க, கோவிட் மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும். மருத்துவர்களுக்கு மருத்துவமனை அருகே வசிப்பதற்கும், உணவு ஏற்பாடு செய்யப்படும். மைக்ரோ பைனாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் பொதுமக்ககுக்கு கடன் வழங்கிய பணத்தை வாங்க கலெக்‌ஷன் ஏஜென்ட்டுகள் வீடுகளில் சென்று அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இரண்டு மாதத்திற்கு அந்த கலெக்னை நிறுத்திவைக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள், காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். காசர்கோட்டில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும். கொரோனாவை நம் மாநிலத்திலிருந்து விரட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு