நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிறை! | Arvind Kejriwal taken into custody in defamation case filed by Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (21/05/2014)

கடைசி தொடர்பு:20:41 (21/05/2014)

நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிறை!

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜனவரிமாதம் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட இந்தியாவின் முக்கிய ஊழல் தலைவர்களின் பட்டியலில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலை இன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை  ரூ. 10,000 மதிப்பிலான ஜாமீன் பத்திரம்  அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கொள்கை ரீதியாக தாம் ஜாமீன் கோர விரும்பவில்லை என கூறி அதனை ஏற்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து நீதிபதி கெஜ்ரிவாலை பார்த்து," அப்படியானால் உங்களை விதிவிலக்காக நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?" எனக் கேட்டார்.

நீதிபதி மேலும் கூறுகையில்,"நீங்கள் ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியாக உள்ளீர்கள். ஆம் ஆத்மி ( சாமான்யன்) போன்றே நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.அனைவருக்கும் விதிமுறைகள் ஒன்றுதான். ஜாமீன் பத்திரம் வழங்குவதில் உங்களுக்கு ஏதும் பிரச்னை உள்ளதா? நீதிமன்றம் உங்களிடம் வேறு எந்தமாதிரி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? " எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், " இது அரசியல் வழக்கு; நான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை. சிறைக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன். நாங்கள் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறோம். இந்த விதமான நடத்தையை என்னிடம் மட்டும் காட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இதேப்போன்று நடத்துங்கள்" என்று கூறினார்.

திகார் சிறையிலடைப்பு

இதனையடுத்து கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து போலீசார் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.அவர் 23 ஆம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் இருப்பார்.

தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி தொண்டர்கள் திகார் சிறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும், திகார் சிறை இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவையும் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்