ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 52 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு! | The girl fell into the well bore to 52 hours after the rescue of the body!

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (20/06/2014)

கடைசி தொடர்பு:12:23 (20/06/2014)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 52 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பிஜாப்பூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி, 52 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குல்பர்கா மாவட்டம், ஜேவர்கியை சேர்ந்த ஹனுமந்த் மாலிக் பட்டீல்- சாவித்திரியம்மா தம்பதியின் 4 வயது மகள் அக்சதா. கூலித்தொழிலாளியான ஹனுமந்த், கடந்த 9 மாதத்திற்கு முன் பிஜாப்பூர் மாவட்டம் நாகடானா கிராமத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த 17ஆம் தேதி இரவு தனது வீடு அருகே ஒரு தெரு நாய் துரத்தியதால் தப்பி ஓடும்போது திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுமி அக்சதா தவறி விழுந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ஹனுமந்த், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுமிக்கு பிராண வாயு செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அவளை மீட்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன. ஆழ்துளை கிணறு அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. சிறுமியை ரோபோட் மூலம் மீட்க மதுரையில் இருந்து மணிகண்டன் பெங்களூர் வரை விமானத்திலும், பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

தனது நவீன ரோபோட் கருவி மூலம் மீட்கும் பணியை மணிகண்டன் தொடங்கினார். 3 முறை தனது ரோபோட் கருவி மூலம் சிறுமியை மீட்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. என்றாலும் அவர் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். மற்றொரும் புறம் குழி தோண்டும் பணியும் தொடர்ந்து நடந்து வந்தது.

இதற்கிடையே ஆழ்குழாய் கிணற்றில் சிறுமி சிக்கி இருக்கும் பகுதி வரை குழி தோண்டப்பட்டது. ஆனால் இடையில் பெரும் பாறை குறுக்கிட்டு மீட்பு பணியில் தடை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிறுமியை எப்படியும் மீட்டுவிட வேண்டும் என்ற முனைப்புடன் மீட்பு குழுவினர் செயல்பட்டனர். 30 அடி ஆழத்தில் சிக்கியுள்ள அந்த சிறுமி மேலும் கீழே செல்லாமல் தடுப்பதற்காக பக்கவாட்டில் இருந்து இரும்பு கம்பிகள் செலுத்தப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை மற்றும் காவல் படையினர் ஒன்றாக இணைந்து சிறுமியை உயிருடன் மீட்க 3வது நாளாக தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஏறத்தாழ 52 மணி நேரம் அவர்களது மீட்பு பணி நீடித்தது.

இந்நிலையில், ஆழ்குழாய் கிணற்றின் அருகே தோண்டிய குழியில் இருந்து பக்கவாட்டில் ஆழ்குழாய் கிணற்றிற்கு சுரங்கம் தோண்டப்பட்டது. இந்த பணி நிறைவடைய நேற்றிரவு 10.45 மணி வரை ஆனது. அதன்பிறகு மீட்பு குழுவினர் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய அக்சதாவை நெருங்கினர். ஆனால் அங்கு சோகமே காத்திருந்தது. அக்சதா ஏற்கனவே இறந்து இருந்தாள். அவளது உடலைத்தான் மீட்புக்குழுவினர் இரவு 11 மணி அளவில் மீட்டனர்.

சிறுமியின் உடலை ஆம்புலன்சு மூலம் பிஜாப்பூர் அரசு மருத்துவமனைக்கு மீட்பு குழுவினர் அனுப்பி வைத்தனர். ஏறத்தாழ 52 மணி நேரம் நீடித்த மீட்பு பணி சோகத்தில் முடிந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்