ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க. அரசு எதிர்ப்பு?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவர்கள் உள்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முடிவு செய்தது.

தமிழக அரசின் முடிவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. இதையடுத்து 7 பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் இடைக்ககால தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை மாற்றப்பட்டது. மேலும், 3 மாதத்துக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை மறுதினம் (8ஆம் தேதி) வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. அரசு அமைந்துள்ளது. ஆனாலும் 7 பேர் விடுதலையில் பா.ஜ.க. அரசு பழைய காங்கிரசின் கொள்கையையே கடை பிடிக்கும் என்றும், 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ''இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை மத்திய அரசு ஆராயும். இது ஒரு மிக மோசமான குற்றச் செயல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை மறக்க முடியாது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!