Published:Updated:

'இது, காது கேட்காத மாநில அரசு!' - அரசுக்கு எதிராகக் கொதிக்கும் மகாராஷ்டிரா மருத்துவர்கள்

லட்சுமணன்.ஜி

மும்பையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர், இறந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டனர்.

மருத்துவர்
மருத்துவர்

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற நோயாளி ஒருவர், கடந்த ஜூன் 10-ம் தேதி உயிரிழந்தார். 'உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்' என்று கூறி, நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களைத் தாக்கினர். இதைக் கண்டித்து, கடந்த 11-ம் தேதி முதல் மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டம் ஒருவார காலத்துக்குப் பிறகு முடிவுக்குவந்தது.

மருத்துவர் மீது தாக்குதல்
மருத்துவர் மீது தாக்குதல்
ANI

இந்நிலையில், இதேபோல ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் உள்ள பி.ஒய்.எல் நாயர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 49 வயது நோயாளி, சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மருத்துவமனை முன்பு திரண்ட அவருடைய உறவினர்கள் 15 பேர், மருத்துவமனைக் காவலரையும் அங்கிருந்த மூன்று மருத்துவர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதைத்தொடர்ந்து, தாக்குதலுக்குள்ளானவர்கள் அக்ரிபாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவர்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு, இந்தக் காதுகேளாத மாநில அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
மகாராஷ்டிரா உள்ளுறை மருத்துவர்கள் சங்கம்
Vikatan

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் (MARD), 'மருத்துவர்களைத் தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றும் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

'அதிகரித்துவரும் மருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும் மருத்துவர்களைப் பாதுகாக்கவும், கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு இந்தக் காதுகேளாத மாநில அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் அந்தச் சங்கம் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

'நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களைத் தணிக்கை செய்து அனுப்புவது, அவர்களுக்கு பாஸ் வழங்குவது, மருத்துவமனையில் அவசரகால அலாரம் பொருத்துவது உள்ளிட்ட அத்தியாவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்றும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.