Election bannerElection banner
Published:Updated:

`1975 -ம் ஆண்டுக்குப் பிறகு...’ -லடாக்கில் சீனாவுடன் மோதிய இந்தியா; 3 வீரர்களுக்கு நேர்ந்த துயரம்

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவம் மதியம் 2 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளிக்கிறது.

இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் முதலே தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீனா ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவிவந்த பதற்றமான சூழல் கடந்த சில நாள்களில் குறைந்துவந்தது.

இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மிக கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் மரணம் அடைந்தனர். எனினும், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல்கள் இல்லை. இந்தியப் பகுதிக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை சீன வீரர்கள் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா
சீனா
AP

இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் இந்திய, சீன உயரதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராணுவத்தின் செய்திக்குறிப்பில் இருதரப்பிலும் மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்திய, சீன வீரர்கள் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்தாலும் அதனால் இரு தரப்பில் மரணங்கள் நடைபெற்றதில்லை. 1975 -க்குப் பிறகு இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வெணியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவம் மதியம் 2 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளிக்கிறது. இதனிடையே சீன வெளியுறவுத்துறை, இந்தியாவிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளது. `தன்னிச்சையான முடிவுகளை எடுக்க வேண்டாம்' என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு