`ஃபேஸ்புக் பதிவு; எம்.எல்.ஏ சர்ச்சை!’ - பெங்களூரை அதிரவைத்த திடீர் வன்முறை; 3 பேர் பலி

``இத்தகைய செயல்களை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. நிச்சயம் குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’’
கர்நாடகா, பெங்களூரில் காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவரின் உறவினரான நவீன் என்பவர் இஸ்லாமியர்களைக் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பதிவு சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு சர்ச்சையாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தி, வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள். எனினும், வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. பின்னர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அங்கிருந்த கடைகளை மூடவும் வற்புறுத்தியுள்ளனர். சாலைகளில் இருந்த வாகனங்களின் டயர்களிலும் தீ வைத்துள்ளனர்.
வன்முறையால் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் அங்கிருந்தவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரைக் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி, காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களிலும் போராட்டக்காரர்கள் தீவைத்து, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பல்வேறு வகைகளிலும் கடுமையாக நடந்த போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறியுள்ளனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு, தடியடி ஆகிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
எனினும், அடங்காத வன்முறையை அடக்க காவலர்கள் வன்முறையாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, கட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுமார் 110 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசமூர்த்தி இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும்போது, ``எனது சகோதரி மகனின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தப் பதிவுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. `இந்தப் பதிவு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரானது’ எனக் கூறப்படுகிறது. இத்தகைய பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரின் உறவினர் நவீன் என்பவர் இது தொடர்பாகக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்றுவருகிறது. ஆனால், நவீன் என்பவர் தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், தான் அந்தப் பதிவை பகிரவில்லை என்றும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள், `சட்டமன்ற உறுப்பினர்மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.
அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசியபோது, ``இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறோம். வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்களை சிசிடிவி காட்சிகளை வைத்துக் கண்டுபிடிப்போம். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த வன்முறைகளில் பத்திரிக்கையாளர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எதிர்பாராத ஒன்று. இத்தகைய செயல்களை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. நிச்சயம் குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் மக்களை அமைதியுடன் இருக்க வேண்டுகோளும் விடுத்துவருகின்றனர்.