Published:Updated:

இஸ்ரேல்: ஊரடங்கில் சிக்கிய 3 வயதுக் குழந்தை!’ - 6 மாத பிரிவால் கண்ணீர்மல்க வரவேற்ற தாய்

தாய் மற்றும் குழந்தை
தாய் மற்றும் குழந்தை

இஸ்ரேல் விமான நிறுவனம் உக்ரைனில் கியேவ் பகுதியில் இருந்து குழந்தையை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளது. பாதுகாவலர் ஒருவருடன் தற்போது இந்தக் குழந்தை இஸ்ரேலில் உள்ள பெற்றோருடன் மீண்டும் சேர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு வகையில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, இந்த ஊரடங்கில் மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் நபர்கள் தங்களது அன்புக்கு உரியவர்களைக் காண முடியாமல் கவலைக்கு ஆளாகினர். தற்போது, பல நாடுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து பயணங்களுக்கும் அனுமதி அளிக்கிறது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித்தவித்த பலரும் தங்களது அன்புக்கு உரியவர்களைப் பார்க்கும் தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்து வருகிறது. இதை எடுத்துரைக்கும் வகையில் இஸ்ரேலில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இஸ்ரேல் நாடானது வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக விமானப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. தற்போது, அங்கு வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசு ஒவ்வொரு தளர்வாக அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கில் 3 வயதுக் குழந்தையான மெலானியா பெட்ருஷான்ஸ்கா இஸ்ரேலில் உள்ள தன் பெற்றோரைப் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

பெட்ருஷான்ஸ்கா கடந்த ஜனவரி மாதம் தன் பாட்டியுடன் உக்ரைனுக்குச் சென்றுள்ளார். மெலானியா பெட்ருஷான்ஸ்காவின் பெற்றோர் உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்து இஸ்ரேலுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் உக்ரைனில் தன் பாட்டியுடன் சிக்கித் தவித்துள்ளார். இதையறிந்த, இஸ்ரேல் விமான நிறுவனம் உக்ரைனில் கியேவ் பகுதியில் இருந்து குழந்தையை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளது. பாதுகாவலர் ஒருவருடன் தற்போது இந்தக் குழந்தை இஸ்ரேலில் உள்ள பெற்றோருடன் மீண்டும் சேர்ந்துள்ளது.

கொரோனா: `அன்பு மகனாக இருந்தான்!’ - பெற்றோர் சிகிச்சையால் குழந்தையைக் கவனித்த தாய் கண்ணீர்

பெட்ருஷான்ஸ்காவின் தாயான அலோனா, குழந்தை பாட்டியிடம் இருக்கும்போது வீடியோ வழியாகப் பேசியதை நினைவு கூர்ந்தார். ``விமானங்களுக்கு உடல்நிலை சரியில்லை. எல்லோரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அழைத்து வர வேறு வழி இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தியதாகத் தெரிவித்தார். பெட்ருஷான்ஸ்கா இஸ்ரேலில் குடியுரிமை உடையவர். ஆனால், அவர் பாட்டிக்கு இஸ்ரேலிய குடியுரிமை இல்லை. இதனால், விமானங்களில் நாட்டுக்கு அவரை அழைத்து வருவதில் சில சிக்கல்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் பெற்றோரும் அவரை அழைத்து வர முடியாத நிலையில் சிக்கியுள்ளனர். இதையும் கடந்து சென்றால் தனிமைப்படுத்துதல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

விமான நிலையம்
விமான நிலையம்

ஒருவழியாக பல மாதங்களுக்குப் பிறகு கஷ்டங்களைக் கடந்து அரசின் உதவியுடன் குழந்தை பெட்ருஷான்ஸ்கா தன் பெற்றோருடன் வந்து சேர்ந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் குழந்தையைப் பார்த்த பெற்றோர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவரை இறுக்கமாக கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்.

அலோனா தன் குழந்தையைக் கண்ணீர் மல்க கட்டியணைத்து நிற்கும் புகைப்படம் பலரையும் கலங்க வைத்துள்ளது எனலாம். வெளிநாடுகளில் இருந்து குழந்தை வருவதால் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் பெற்றோர் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ``நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஏனெனில், நீண்ட கடினமான நாள்களுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாக இணைகிறோம்” என்று அலோனா தெரிவித்துள்ளார்.

கொரோனா: `பாதிப்படைந்த தாயை ஜன்னல் வழியே பார்க்கும் மகன்!’ - மனதை உருக்கும் புகைப்படம்
அடுத்த கட்டுரைக்கு