கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்க நடவடிக்கை! | In Karnataka boy fell into the bore well: action to restore the boy life

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (04/08/2014)

கடைசி தொடர்பு:12:15 (04/08/2014)

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்க நடவடிக்கை!

பெங்களூர்: கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அனுமந்தா ஹட்டி. இவரது மகன் திம்மண்ணா (வயது 7). அதே கிராமத்தில் அனுமந்தா கட்டிக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. 250 அடி வரை தோண்டியும் தண்ணீர் வராததால் ஆழ்குழாய் கிணற்றை மேலும் தோண்டாமல் அப்படியே விட்டு விட்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பாவின் மகனுடன், சிறுவன் திம்மண்ணா கரும்பு தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழ்குழாய் கிணற்றில் கால் தவறி விழுந்து உயிருக்கு போராடினான். இதுபற்றிய தகவல் அறிந்த பாதாமி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 10 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கி இருந்த நிலையில், மண் சரிந்து விழுந்ததால் மேலும் சில அடிக்கு கீழே திம்மண்ணா சென்று விட்டான்.

பாகல்கோட்டை மாவட்ட கலெக்டர், மற்றும் அதிகாரிகளும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து திம்மண்ணாவை மீட்கும் பணியை முடுக்கி விட்டனர். முன் எச்சரிக்கையாக அங்கு டாக்டர்களுடன் ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. கண்காணிப்பு காமிராவை ஆழ்குழாய் கிணற்றுக்குள் விட்டு, திம்மண்ணாவின் நிலைமை குறித்து ஆய்வு செய்தபோது சிறுவனின் கை அசைவது காமிராவில் தெரிந்தது.

இதையடுத்து, திம்மண்ணாவின் உயிரை காப்பாற்ற ஆக்ஸிஜன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்துக்கு 2 ஜே.சி.பி. வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணற்றின் அருகே 10 அடி தூரத்தில் குழிகள் தோண்டும் பணியும் தொடங்கியது. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சிறுவன் திம்மண்ணாவை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், 20 முதல் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால் ரோபோ உதவியுடன் மீட்கும், மதுரையை சேர்ந்த மீட்பு குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்