கர்நாடகா: ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் 8 தினங்களுக்கு பின்னர் மீட்பு! | karnataka, child body retrive from borewell

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (11/08/2014)

கடைசி தொடர்பு:19:04 (11/08/2014)

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் 8 தினங்களுக்கு பின்னர் மீட்பு!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டையில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவனின் சடலம், 8 தினங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்த அனுமந்தா கட்டி என்பவரின் மகன் திம்மண்ணா (6), கடந்த 3ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 300 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.

ஆழ்குழாய் கிணற்றின் 160 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க ஆழ்குழாய் கிணற்றின் அருகே குழி தோண்டும் பணி இரவு பகல் பராமல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிறுவனை உயிருடன் மீட்கும் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்தது. கடந்த 9 ஆம் தேதியன்றே சிறுவன் மீது கிடந்த மண்ணை அள்ளும் போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்தது.

இதனால் சிறுவன் உயிர் இழந்திருக்கலாம் என்று கருதபட்டது. ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக அரசு அதிகாரிகள் உறுதியாக சொல்லவில்லை. இந்நிலையில், சிறுவன் திம்மண்ணா உயிர் இழந்து விட்டதாக டாக்டர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் அறிவித்தனர்.

இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, கம்ப்ரஸ் டெக்னிக் மூலம் சிறுவனின் சடலத்தை மீட்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. பலமணி நேர முயற்சிக்கு பிறகு இன்று அதிகாலை 4 மணி அளவில் சடலம் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
சடலத்தை எடுத்துவிட்டதால் ஆழ்துளைகிணற்றை மூடும்பணி நடந்துவருகிறது. அதேபோல, ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் பணியும் நடைபெறுகிறது 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்