Published:Updated:

`வீட்டு வாடகை ரூ.30,000; ஸ்கூல் பீஸ் ரூ.2 லட்சம்!’ -ரயில்வே போலீஸாரை மிரளவைத்த ஹைதராபாத் திருடன்

நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயிலில் மட்டுமே கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்ட தனேந்தர் சிங், ஒருமுறை ரயிலில் ஏறி இறங்கினால் குறைந்தது 20,000 ரூபாயாவது இல்லாமல் வீடு திரும்பமாட்டார்.

திருடன்
திருடன் ( மாதிரி புகைப்படம் )

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் 33 வயது வயதான தனேந்தர் சிங் குஷ்வா. 2004-ம் ஆண்டு முதல் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் தனேந்தர் மீது இதுவரை 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் குற்றங்களுக்காக சிலமுறை சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே போலீஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.

திருடன்
திருடன்
மாதிரி புகைப்படம்

கைது செய்யப்பட்ட தனேந்தரிடமிருந்து 668 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், 13.53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தனேந்தரின் சொத்து விவரங்கள் மற்றும் வாழ்க்கை முறையைக் கேள்விப்பட்டு அசந்துபோயுள்ளனர் ரயில்வே போலீஸார்.

இவர் செகந்திராபாத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு மாதம் ரூ.30,000 வரை வாடகை கொடுக்கிறார். மேலும், தன் இரண்டு பிள்ளைகளையும் ஆடம்பரமான சர்வதேசப் பள்ளியில் படிக்க வைத்து அவர்களுக்கு வருடம் 2 லட்சம் ரூபாய் வரை பள்ளிக் கட்டணமாகச் செலுத்தி வந்துள்ளார்.

நகைக் கொள்ளை
நகைக் கொள்ளை
மாதிரி படம்

இது பற்றி பேசியுள்ள ரயில்வே போலீஸார், ``உத்தரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தனேந்தர் சிங், 2004-ம் ஆண்டு புனேவுக்கு குடிபெயர்ந்து புனே- செகந்தராபாத் ரயிலில் சாதாரண பொருள்கள் விற்பனை செய்யும் வேலை செய்து வந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் ரயில் பயணிகளிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்து அதை முறைகேடான விஷயங்களுக்கும் நிலம் போன்றவை வாங்குவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு முன் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும், ஜாமீனில் வெளியில் வந்தும் வழக்கம்போல தன் திருட்டு தொழிலை செய்து வந்துள்ளார்.

`திருட்டுக்கு நடுவே ஊஞ்சலாடிய  திருடன்!’ - சிசிடிவி காட்சியைப் பார்த்து `ஷாக்' ஆன ஆசிரியர்

நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயிலில் மட்டுமே கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்ட தனேந்தர் சிங், ஒருமுறை ரயிலில் ஏறி இறங்கினால் குறைந்தது 20,000 ரூபாயாவது இல்லாமல் வீடு திரும்பமாட்டார். ஒரு மாதத்துக்கு 8 முறை ரயில் பயணம் மேற்கொண்டு வரும் இவர் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு காவலர்களிடம் சிக்காமல் சுதந்திரமாக வெளியில் திரிந்து வந்துள்ளார். மேலும், தனேந்தர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்கூட எடுக்காமல் முறைகேடாகப் பயணம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத் போலீஸ்

ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த திருடன் தனேந்தர் நேற்று முன்தினம் தன் கூட்டாளியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹைதராபாத் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அவரை நோட்டமிட்ட போலீஸார், எப்படியும் மீண்டும் வண்டியை எடுக்க வந்துதான் ஆக வேண்டும் என்று தனேந்தருக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

காவலர்களின் பிளான்படி திருட்டை முடித்துவிட்டு வண்டியை எடுக்க வந்த தனேந்தர் வசமாகக் காவலர்கள் வலையில் சிக்கியுள்ளார்.