கருத்தடை அறுவை சிகிச்சையில் 13 பெண்கள் பலி: டாக்டர் கைது!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 13 பேர்  பலியான விவகாரத்தில்,  அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம்  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தகத்பூரில் அரசு சார்பில்   குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அந்த முகாமில் 83 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது.

கருத்தடை அறுவை செய்த பெண்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் 13 பெண்கள் அடுத்தடுத்து  மரணம் அடைந்தனர். இந்த மரணங்கள்  நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிலாஸ்பூர் மாவட்ட காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, தரமற்ற கருவிகள் கொண்டு சிகிச்சை கொடுத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் உரிய மருந்துகளும் அந்த பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும்  தெரிய வந்தது.

மேலும் அங்குள்ள மருத்துவர்களின்  அலட்சியத்தால், இன்னமும் 70 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த குடும்ப நல சிகிச்சை முகாமில் பங்கேற்ற டாக்டர்களில் 4 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்தி வந்த  விசாரணையில், 83 பெண்களுக்கும்  அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஆர்.கே.குப்தாவை  பலோடா பஜார் மாவட்ட  காவல்துறையினர் அதிரடியாக   கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 83 பெண்களுக்கும், டாக்டர் குப்தா மின்னல் வேகத்தில் அறுவை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர் ஆர்.கே.குப்தா,  ஒரு பெண்ணுக்கு தலா 2 நிமிடங்களில் அறுவை சிகிச்சை  செய்து முடித்தது  கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஆர்.கே.குப்தா, மருத்துவத் துறையில் சாதனைகள் படைத்ததற்காக பல்வேறு விருதுகளைப்  பெற்றவர். சமீபத்தில் அவர் 50 ஆயிரம் அறுவைகள்  செய்து முடித்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்குதான் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர்  அமர்அகர் வால் விருது கொடுத்து சிறப்பித்து இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!