வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/11/2014)

கடைசி தொடர்பு:13:24 (13/11/2014)

துப்பாக்கியைக் காட்டி பெண்ணை நடனமாட வைத்த காவலர் பணியிடை நீக்கம்!

பெரேலி: உத்தரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணை நடனம் ஆடவைத்த விவகாரத்தில், காவலர் ஒருவரை  பணியிடை நீக்கம் செய்து  மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹ்லி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிபவர்  சைலேந்திர குமார் சுக்லா.

இவர் துப்பாக்கி முனையில் நடனப்பெண் ஒருவரை  மிரட்டி நடனமாட வைத்துள்ளது அங்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடனப் பெண்ணை  மிரட்டி ஆட  வைத்ததுடன் அவர் மீது பணத்தையும் சுக்லா விசிறி எறிந்து ரசித்த  வீடியோ காட்சிகள், தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பகுதியில், ராம்லீலா விழா நடந்துள்ளது.அப்போது  ஆடல் நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் போதையில் மிதந்தவாறு சுக்லா அங்கு  சென்று இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

நடனப் பெண்ணிடம் சுக்லா, தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால்  கொன்று விடுவேன் என மிரட்டி  தன் முன் நடனமாடுமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன அப்பெண்ணும் நடனமாட ஆரம்பித்துள்ளார். அப்போது தான் கையில் வைத்திருந்த ரூ. 30,000 பணத்தில் இருந்து ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுக்களை   அப்பெண்ணின் மேல் விசிறியடித்துள்ளார்.

பின்னர் அவரும் அப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடி  மகிழ்ந்துள்ளார். இப்படியே  ஒரு மணி நேரம் நடனமாடிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார் சுக்லா.

இந்த நிகழ்வை படம்பிடித்த ஒருவர் சமூக வலைத் தளமான யூ டியூபில் அதை வெளியிட, சுக்லாவின் செயல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுக்லாவை பணியிடை நீக்கம் செய்து ஷாஜகான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் சந்திர சாகூ உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்