Published:Updated:

`தாயகம் திரும்ப 201 நாடுகளில் உள்ள 3,53,468 மலையாளிகள் முன்பதிவு!’ - பினராயி விஜயன் தகவல்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது இயலாத காரியமாகும். இதனால் நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் கேரளா வருவதற்காக முன்பதிவு செய்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதுபோல கேரளத்திலிருந்து மூன்று லட்சத்து அறுபதாயிரம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல விரும்புவதாகவும், அவர்களை பஸ்ஸில் அனுப்ப முடியாது இடைநில்லா ரயில் இயக்க வேண்டும் எனவும் பினராயி விஜயன் கோதிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளாவில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் காசர்கோடு மாவட்டத்தையும், இன்னொருவர் மலப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்துள்ளார். மற்றொருவர் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் பரவியுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணூர் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 47 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 20,711 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 20,285 பேர் வீடுகளிலும், 426 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது கேரளா முழுவதும் 70 நோய் தீவிரப் பகுதிகள் உள்ளன. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத 954 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் எதிர்பாராத இடங்களிலிருந்து பரவி வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் மூலமும் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் ஆய்வு
கொரோனா வைரஸ் ஆய்வு

தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது இயலாத காரியமாகும். இதனால் நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு துறைகளைப் போல கல்வித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலனுக்காக பல்கலைக்கழக பாடங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. கேரளாவில் இப்போது 3,60,000 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல விரும்புகின்றனர். எனவே, அவர்களை ஊருக்கு அனுப்பிவைக்க சிறப்பு இடைநில்லா ரயில் இயக்க வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இந்த நிலையில், அவர்கள் பஸ்களில் ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களை பஸ்களில் அனுப்பி வைக்க முடியாது. எனவே, அவர்களை ஊருக்கு அனுப்ப இடைநில்லா சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு திரும்ப விரும்பும் மலையாளிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த சில தினங்களாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 201 நாடுகளில் உள்ள 3,53,468 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மிக அதிகமாக ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் 1,53,660 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சவுதி அரேபியாவிலிருந்து 47,268 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியல் மத்திய அரசுக்கும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் பிறகு அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

அதுபோல வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு வர விரும்புபவர்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இது வரை 94,483 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து 30,576 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 29,181 பேரும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 13,113 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு