வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (16/12/2014)

கடைசி தொடர்பு:16:22 (16/12/2014)

இனி பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டு!

சென்னை: பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக்கி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு இது வரை ஓராண்டு படிப்பாகவே இருந்து வந்தது. தரமான ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்றால் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான படிப்பு காலத்தை உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இதையடுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா அனைத்து மாநில ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது இதுவரை ஓராண்டு கால படிப்பாக இருந்த பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் இனி 2 ஆண்டுகால படிப்பாக மாற்றம் செய்யப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.எட். மற்றும் எம்.எட். பட்டப்படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும்.

இது தவிர பிளஸ் 2 முடித்து விட்டு மாணவர்கள் சேரும் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கான பெயரை நாடு முழுவதும் ஒரே மாதிரி அழைக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது இரணடாண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்புகள் தமிழகத்தில் டீச்சர் ட்ரெயினிங் டிப்ளமோ படிப்பு என்றும் பிற மாநிலங்களில் பி.டி.சி., ஜே.பி.டி. என்று வேறு வேறு பெயர்களில் அந்த படிப்புகளை அழைத்து வந்தனர்.

இனிமேல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை டி.எல்.எட். (தொடக்க ஆசிரியர் கல்வியியல் டிப்ளமோ படிப்பு) என்று ஒரே பெயராக மாற்றி அமைத்துள்ளார்.

மேலும் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர் டிப்ளமோ படிப்பை ( டி.பி.எஸ்.இ) தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

-எம்.கார்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்