ஜம்மு காஷ்மீரில் மறைமுகப்போர் நடத்தும் பாகிஸ்தான்: ராணுவ தளபதி பகீர்!

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீரில் மறைமுகப்  போரை பாகிஸ்தான் நடத்துகிறது என்று  ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தீவிரவாதத்தால் தனது மண்ணுக்கு மிகப்பெரும் விளைவு ஏற்பட்டு வரும் நிலையிலும், பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் மறைமுக போருக்கு ஆதரவு அளிக்கிறது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

டெல்லியில்  நடந்த  வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில், ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  ”நெஞ்சை உருக்கும் பெஷாவர்  தாக்குதலுக்கு பிறகாவது பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதா என்று  நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அச்சுறுத்தல்களூம் சவால்களும் அதிகரித்துள்ளன. அதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தங்கள் நாட்டுக்குள்ளேயே தீவிரவாதத்தால் கடுமையாக  பாதிப்படைகின்ற போதிலும்,  பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் மறைமுக போரில் ஈடுபடுகிறது”  என்று தெரிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியதால், சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவு வாக்குகள் பதிவானதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார். ” மக்கள் வாக்களிக்க நம்பிக்கையுடன் வெளியே வந்தனர். அதற்காக ராணுவமும் பிற பாதுகாப்பு அமைப்புகளூம் ஒய்வில்லாமல் மாதக்கணக்கில் உழைத்தது” என்று தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்த ராணுவ தளபதி, கொல்லப்பட்ட 110 தீவிரவாதிகளில் 104 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 65 தீவிரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!