Published:Updated:

`சுற்றுலாத் துறைக்கு வரப்போகும் பேராபத்து!' - பிரதமருக்குச் சுட்டிக் காட்டிய ஃபெய்த் #corona

சுற்றுலா துறை
சுற்றுலா துறை ( மாதிரிப் படம் )

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பணியாளர்களுக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு உரிய அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும்- ஃபெய்த்.

உலகம் எங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கச் சொல்கின்றனர் சுகாதாரத் துறையினர். இதனால், ஃபெய்த் எனப்படும் `தி பெடரேஷன் ஆஃப் அஸோஸியேஷன்ஸ் இன் இந்தியன் டூரிஸம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி (The Federation of Associations in Indian Tourism and Hospitality(FAITH))' அமைப்பானது, சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், `கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் 70 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள் 5.5 கோடி பேர். இதில் 70 சதவிகிதம் என்பது சுமார் 3.8 கோடி பேர். வேலையில்லாமை மற்றும் பணிநீக்கம் என இப்போதே இதன் விளைவுகள் தொடங்கிவிட்டன. எனவே, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பணியாளர்களுக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு உரிய அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும்.

கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்குக் கொரோனா?! - திருவாரூரில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர்

இந்தத் தொற்று நோயின் காரணமாக உருவாகும் வேலையின்மை, பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களைக் கவனித்துவருகிறோம். இந்தியாவின் மொத்த சுற்றுலா வணிக சதவிகிதம், அந்நியச் செலாவணியில் 28 பில்லியன் அமெரிக்க டாலரும், உள்நாட்டு சுற்றுலா வணிகம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இப்போது ஆபத்தில் உள்ளது. மேலும், ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் நேரடி சுற்றுலாத் துறை மற்றும் மொத்த பொருளாதார நிலைக்கும் இரு மடங்கு ஆபத்து உள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பணியாளர்களுக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு உரிய அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும்.
ஃபெய்த்

மேலும், ``வருவாய் குறைந்து வருவதால் அனைத்துச் சுற்றுலா நிறுவனங்களும் கடும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. எனவே, நிதி நிறுவனங்களிலிருந்து (வங்கி மற்றும் வங்கி சாராதது) கடன்கள் மற்றும் இ.எம்.ஐ-களில் பன்னிரண்டு மாத கால தடை விதிக்குமாறும், கூடுதலாக, வட்டி இல்லாத மற்றும் இணை இலவச விதிமுறைகளில் பணி மூலதன வரம்புகளை இரட்டிப்பாக்கவும் பிரதமரிடம் கோரியுள்ளது. இவ்வாறு செய்வதால் அனைத்துச் சுற்றுலா நிறுவனங்களும் திவாலாகாமல் தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஃபெய்த்
ஃபெய்த்

மேலும், ஜி.எஸ்.டி, பி.எஃப், அட்வான்ஸ் வரி செலுத்துதல், சுங்க வரி, மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணம், வங்கி உத்தரவாதங்கள், பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் அனைத்து சட்டரீதியான நிலுவைத் தொகையும், தொழில் சம்பந்தப்பட்ட புதுப்பித்தல்களையும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நிதி மசோதாவில், ஏப்ரல் 1, 2020 முதல் பயணங்களுக்கு வரி (Tax collected at source) வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, பெரும்பாலான சுற்றுலா நிறுவனங்கள் மூடுவதற்கு வழிவகுக்கும். எனவே, இதை அறிமுகப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டது. பன்னிரண்டு மாதங்களுக்கு சுற்றுலாத் துறைக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு