மின்துறையில் முதலீடு: யு.எஸ்.ஸுக்கு இந்தியா அழைப்பு

புதுதில்லி, செப்.21, 2011

இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சக்தி துறையில் முதலீடு செய்ய அமெரிக்க முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று மத்திய மின்சக்தி துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிகாகோவில் செவ்வாய்க்கிழமை இந்தியா-அமெரிக்கா பொருளாதார வாய்ப்புகள் குறித்த மாநாட்டில் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாநாட்டை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும், சிகாகோ நிர்வாக மன்றமும் ஏற்பாடு செய்துள்ளது.

மாநாட்டில் அமைச்சர் சுஷில்குமார் பேசுகையில், "இந்தியா தற்போது ஒரு லட்சத்து 81 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.  மேலும் 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.  2007 முதல் 2012 ஆம் ஆண்டுக்குள் மின்சக்தி துறையில் 23000 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

12-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மேலும் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதேபோல் இன்னும் கூடுதல் முதலீடு இத்துறையில் தேவைப்படுகிறது. தனியார் துறையின் உறுதியான ஒத்துழைப்புடன் தான் இந்த மாபெரும் பணியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். 11-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மின்சக்தி துறையின் விரிவாக்கத்தில் தனியார் துறையின் பங்கு அதிகரித்தது. 12-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் தனியார் துறையின் பங்கு 50 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அளவிற்கு அனுமதிக்கப்படும். 

பொதுத்துறை, தனியார் பங்கேற்புடன் 16 அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட், மாநிலங்களுக்கிடையே 14 மின்சக்தி பகிர்மான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு அல்ட்ரா மெகா பவர் புராஜக்டும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சக்தி திறன் கொண்டதாகும். இதற்கு 4500 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு தேவையாகும்.

2022 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியா துவக்கியுள்ளது. மாநில மின்சக்தி ஒழுங்கு முறை ஆணையங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் குறிப்பிட்ட அளவு மின்சக்தி பெறவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதேபோல துரிதப்படுத்தப்பட்ட மின்சக்தி விநியோகம் மற்றும் சீர்திருத்த திட்டம் போன்றவற்றையும் இந்தியா துவக்கியுள்ளது," என்றார் ஷிண்டே தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!