மனம் நொறுங்கிய நிலையிலும் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்கிறார் கன்னியாஸ்திரி!

கொல்கத்தா:  தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். 

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும்  இருக்கிறார்.

"என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்!" என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட கவலையை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருக்கிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆதிந்தரநாத் மோன்டல் கூறியுள்ளார்.

ஆனால் கன்னியாஸ்திரியின் பிரார்த்தனையைக் கேட்டு, அவரை பார்க்க வந்தவர்கள் துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் அருகிலிருந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் உலகம் முழுவதும் பரவியதால், பல்வேறு கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர் ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்குத் தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம் திரும்பினர். மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச் சந்தித்தனர்.

இதுகுறித்து ஐரீன் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை. போர் நடக்கும் பல இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம். அந்த இடங்களில் கூட இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை’’ என்றார்.

இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் அல்ல. இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!