டெல்லியில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் மக்கள் மாலை 7 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியில் வருவதையே குறைத்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லி சக்தாரா சீமபுரி என்ற இடத்திலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தின் நான்காவது மாடியில் ராதா என்ற பெண் தனது நான்கு குழந்தைகள், கணவருடன் வாடகைக்கு வசித்துவந்தார்.
காலையில் அவர்களது வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டு இருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவைத் தட்டியும், கதவு திறக்கவில்லை. இதனால் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது ராதாவும், அவரின் நான்கு குழந்தைகளும் மயங்கிக்கிடந்தனர். அவர்களைச் சோதித்துப்பார்த்ததில் ராதா உட்பட நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். கடைசிக் குழந்தை மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அந்தக் குழந்தையும் பரிதாபமாக இறந்தது. வீட்டில் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னல் உட்பட அனைத்தையும் முழுமையாக அடைத்துவிட்டு, அடுப்பைப் பற்றவைத்துவிட்டு ஐந்து பேரும் உறங்கியிருக்கின்றனர். ஆனால் ஸ்டவ் அதிக நேரம் எரிந்ததிலிருந்து வெளியான நச்சுப்புகை வெளியேற வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறது.
இதனால் ஐந்து பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் சத்ய சுந்தரம் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த மரணத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
