Published:Updated:

`தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா' - சோகத்தில் மும்பை மருத்துவமனை

representational image
representational image

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள 300 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்கள் ஒரேநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே மூன்று பேர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கொரோனா பாதித்த நோயாளிகளில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். அதன் பின்னர், அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரு செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

மருத்துவமனை மற்றும் செவிலியர்கள் தங்கியிருந்த விடுதியில் போதிய எச்சரிக்கை கடைப்பிடிக்கப்படாததால், அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவமனை அமைந்துள்ள பிரிஹன் மும்பைப் பகுதி, முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

representational image
representational image

மருத்துவமனையில் மொத்தம் 300 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில் 200 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இன்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவில், 51 செவிலியர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதில் 40 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பிற கேரள செவிலியர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு