`முந்தைய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தையே மாநிலங்கள் அமல்படுத்தலாம்`! | In the case of land acquisition law states that the procedure may be implemented as a radio address to the prime minister, has said Modi.

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (23/03/2015)

கடைசி தொடர்பு:13:21 (23/03/2015)

`முந்தைய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தையே மாநிலங்கள் அமல்படுத்தலாம்`!

புதுடெல்லி:  நிலம் கையகப்படுத்தும் சட்ட விவகாரத்தில் முந்தைய நடைமுறையை மாநிலங்கள் அமல்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தனது வானொலி உரையில் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஆற்றிய வானொலி உரையில்,"  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, விவசாயிகளின் நலனைக் கருதி அந்தச் சட்டத்தை ஆதரித்தது. முந்தைய அரசின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம், ஆனால், அந்தச் சட்டத்தில் குறைகள் உள்ளன. அதை தற்போது சரி செய்ய வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், முந்தைய அரசுகள், எதை விரும்பினார்கள், எதை விரும்பவில்லை என்று நான் குற்றச்சாட்டுகளைத்  தெரிவிக்கவில்லை. விவசாயிகள், அவர்களின் குழந்தைகள், கிராமங்கள் பயனடைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். எனவே குறைகளைச்  சரி செய்து, கிராம மக்கள், விவசாயிகள், அவர்களின் எதிர்கால சந்ததியினர் பயனடைவதை உறுதி செய்யவும், அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காகத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது, மசோதாவில் விவசாயிகளின் நலனுக்குத் தேவையான திருத்தங்களைச்  செய்யத் தயாராக இருப்பதாகத்  தெரிவித்திருந்தேன். அதே கருத்தை இப்போது மீண்டும் தெரிவிக்கிறேன். மசோதாவில் ஏதேனும் குறைகள் இருப்பதாக யாரேனும் கருதினால், அதில் திருத்தம் செய்ய அரசு தயாராக உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பிறகும், நாடு முழுவதும் அது செயல்படுத்தப்படவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்களான மகாராஷ்டிரம், ஹரியாணா போன்றவைதான் அந்தச் சட்டத்தைச்  செயல்படுத்தின. ஆனால், அந்தச்  சட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி அல்லாமல், பாதியளவுதான் விவசாயிகளுக்கு இழப்பீட்டை அந்த மாநிலங்கள் அளித்தன.

முந்தைய சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறையை நான் தெரிவித்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்தச் சட்டத்தில், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சுரங்கம் போன்ற அரசுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதாவது, அந்தத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதற்கான இழப்பீடு, 120 ஆண்டுகள் பழைமையான சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இந்தத் தவறைச்  சரி செய்யும் முயற்சியில்தான் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். புதிய மசோதாவில் இந்தக்  குறை சரி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 4 மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய மசோதாவில், வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் 20 சதவீத இடமானது, உரிமையாளருக்கு அளிக்கப்படும் என்பதும், அவரது குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பணிகளுக்கு முதலில் அரசு நிலத்தையும், பிறகு தரிசு நிலத்தையும் கையகப்படுத்த வேண்டும் என்றும், அதன்பிறகே தேவை ஏற்பட்டால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதனால்தான், தரிசு நிலத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அந்த நிலம் குறித்து ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

நாட்டுக்கு எதிராக சதி: கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மோடி குறைத்து விட்டதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற பாவத்தை செய்ய வேண்டும் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரானது என்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக இதுபோல் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.

விவசாயிகள் தொடர்ந்து ஏழையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாடு வளர்ச்சியடையக் கூடாது என்பதற்காகவும் தீட்டப்பட்ட சதித்திட்டமே இதுவாகும். இதை நமது நாடும், விவசாயிகளும் எதிர்க்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டதும், கிராமங்களில் வளர்ச்சி ஏற்படும். அங்கு சாலைகள் அமைக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான கால்வாய்கள் ஏற்படுத்தப்படும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வீடுகள் கட்டித் தரப்படும். மத்திய அரசின் மசோதாவை பெரு நிறுவனங்கள், பணக்காரர்களுக்கு சாதகமானது என்று தெரிவிக்கப்படுவதை நிராகரிக்கிறேன்.

புதிய மசோதாவில், விவசாயிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. முதலில் தாலுகா அளவிலும், பின்னர் உயர் நீதிமன்றத்தையும் விவசாயிகள் அணுகலாம் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலம் விரும்பிகள் என்று தங்களைத் தானே தெரிவித்துக் கொண்டு போராட்டம் நடத்துவோர்   விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு 120 ஆண்டுகள் பழைமையான சட்டத்தைப்  பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், கடந்த 60 முதல் 65 ஆண்டுகளாக அதே சட்டத்தைப்  பின்பற்றிய அவர்கள், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இருக்கும் குறைகளைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எனது அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, விவசாயிகளின் "ஒப்புதல் தேவையில்லை' என்ற ஷரத்து எனது அரசால் சேர்க்கப்படவில்லை. முந்தைய சட்டத்திலேயே அந்த ஷரத்து இருந்தது. இந்த தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுக்கும் விவசாயிகள் வந்து விட வேண்டாம். என்னை நம்புங்கள். உங்களது நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்" என்று  தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்