Published:Updated:

`44 பாலங்கள் திறப்பு; ஒரே ஆண்டில் 102 பாலங்கள்!’ - எல்லைப் போக்குவரத்தை வலுப்படுத்தும் ராணுவம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

``2019-ம் ஆண்டில் 28 பெரிய பாலங்களை அமைத்திருக்கிறோம். மேலும், 102 பெரிய பாலங்கள் இந்த ஆண்டு நிறைவடையும்.’’

சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் வடக்கு, கிழக்குப் பகுதி எல்லைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை விவகாரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்படுவதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

எல்லையில் பதற்றம் நீடித்துவரும் சூழலில், இந்தியா எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக லடாக், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் ஆகிய எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் ஜம்மு-காஷ்மீரில் 10, லடாக், உத்தராகண்ட் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் தலா எட்டு, இமாச்சலப்பிரதேசத்தில் இரண்டு மற்றும் சிக்கிமில் நான்கு என கட்டப்பட்டுள்ள இந்தப் பாலங்கள் 30 முதல் 484 மீட்டர் தூரம் நீளம் கொண்டவை.

எல்லைப் பகுதி சாலைகளை நிர்வகிக்கும் பி.ஆர்.ஓ (Border Roads Organization - BRO) சார்பில் கட்டப்பட் 44 பாலங்களும் புவியியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக எல்லையில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான தளவாடப் பொருள்களை விரைவாகக் கொண்டு செல்ல உதவிகரமாக இருக்கும். 71 டன் வரை எடையுள்ள வாகனங்களைத் தாங்கும் வல்லமைகொண்டவை இந்தப் பாலங்கள்.

பாலங்கள் திறப்பு
பாலங்கள் திறப்பு

44 பாலங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் டெல்லியிலிருந்து காணொலி காட்சிக் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்னை குறித்தும், அவர்களை எதிர்த்துப் போரிடும் இந்திய ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ``நம்முடைய வடக்கு மற்றும் கிழக்கு எல்லையில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரு நாடுகளும் நம்முடன் 7,000 கி.மீ தொலைவுக்கு எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன.

India-China Face-Off: `DSDBO சாலை... கிளாஸ் 70; அக்டோபர் 15 டார்கெட்!’ - என்ன நடக்கிறது எல்லையில்?

தொலைநோக்குப் பார்வைகொண்ட பிரதமர் மோடியின் தலைமையால், இந்தப் பிரச்னைகளை வலிமையாக அணுகிவருகிறோம். அனைத்துத் துறைகளிலும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். இந்தப் புதிய பாலங்கள் நாட்டின் ஏழு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களிலுள்ள தொலைதூரப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்’’ என்றார்.

மேலும், பி.ஆர்.ஓ-வின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங், ``44 பாலங்களை ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய சாதனை. கடந்த 2008 மற்றும் 2016 ஆண்டுகளுக்கிடையே ரூ .3,300 கோடியிலிருந்து ரூ .4,600 கோடியாக இருந்த பி.ஆர்.ஓ-வின் பட்ஜெட், தற்போது ரூ.11,000 கோடியாக இருக்கிறது’’ என்றும் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள நெச்சிபு (Nechiphu) சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை உள்கட்டமைப்புத் திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். ``வடகிழக்கு மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு இது இணைப்பை ஏற்படுத்தும்’’ என்று கூறிய அவர், தவாங் செல்லும் சாலையிலுள்ள 450 மீட்டர் இருவழிச் சுரங்கப்பாதை நெச்சிபு பாஸ் ஆண்டு முழுவதும் போக்குவரத்துக்குத் துணைபுரியும் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து பி.ஆர்.ஓ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் கூறுகையில், ``சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்துவதோடு, 2019-ம் ஆண்டில் 28 பெரிய பாலங்களை அமைத்திருக்கிறோம். மேலும், 102 பெரிய பாலங்கள் இந்த ஆண்டு நிறைவடையும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு