Published:Updated:

`உடனடியாகக் குடிசைகளைக் காலி செய்யுங்கள்!’ - ட்ரம்ப் வருகையால் தவிக்கும் அகமதாபாத் மக்கள்

மோடி - ட்ரம்ப் ( ANI )

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையையொட்டி அகமதாபாத்தில் உள்ள 45 குடிசை வாழ் மக்களுக்கு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

`உடனடியாகக் குடிசைகளைக் காலி செய்யுங்கள்!’ - ட்ரம்ப் வருகையால் தவிக்கும் அகமதாபாத் மக்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையையொட்டி அகமதாபாத்தில் உள்ள 45 குடிசை வாழ் மக்களுக்கு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Published:Updated:
மோடி - ட்ரம்ப் ( ANI )

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24-ம் தேதி முதன்முறையாக இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். முதலில் டெல்லியில் தங்குகிறார். பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார். அகமதாபாத் விமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரை சாலை வழியாக ட்ரம்ப் தம்பதி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

படேல் ஸ்டேடியம்
படேல் ஸ்டேடியம்
AP

பின்னர் அகமதாபாத்தில் 100 மில்லியன் டாலர் மதிப்பில், கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு ஹூஸ்டனில் நடந்த `ஹவ்டி மோடி' நிகழ்ச்சி போல சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் `கெம் சோ ட்ரம்ப்' என்கிற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விமான நிலையத்திலிருந்து ஸ்டேடியம் வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ட்ரம்புக்குப் பிரமாண்டமான வரவேற்பு வழங்கவுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெறும் மூன்று மணி நேரங்கள் மட்டுமே ட்ரம்ப், அகமதாபாத்தில் இருக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சாலைகளைச் சீரமைப்பது சாலையின் நடுவே அழகிய செடிகள், மரங்கள் போன்றவை நடுவது, நடைபாதையைப் புதுப்பிப்பது, ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் மாநகராட்சியும். நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காகக் குஜராத் மாநில அரசு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிசையை  மறைக்கும் சுவர்
குடிசையை மறைக்கும் சுவர்
AP

இது இப்படி என்றால் மறுபுறம், விமான நிலையத்திலிருந்து படேல் மைதானத்துக்குச் செல்லும் வழிகளில் உள்ள 500 குடிசை வீடுகளை மறைக்கும் வகையில், பெரிய பெரிய சுவர்களைக் கட்டும் பணியில் அகமதாபாத் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இது முடிவதற்குள் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது குஜராத் அரசு. படேல் மைதானத்துக்கு அருகில் உள்ள குடிசைகளில் குடியிருக்கும் மக்கள் உடனடியாக அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 45 குடும்பங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறும்படி அகமதாபாத் நிர்வாகம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வரவுள்ளதால் எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். நாங்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு ரூ.300 சம்பளம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், எங்களைக் குடிசைகளை காலி செய்யச்சொல்கிறார்கள்.

வேறு எங்கு செல்வது என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள். இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு அல்லது அதற்கும் அதிகமானவர்கள் உள்ளோம். உடனடியாக அனைவரையும் அழைத்துக்கொண்டு வேறு எங்கு செல்வது? “ என்று 35 வயதான தேஜா மெடா என்ற தொழிலாளி ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.

குடிசையை  மறைக்கும் சுவர்
குடிசையை மறைக்கும் சுவர்
AP

இந்தச் சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள மோடிரா (படேல் மைதானம் அமைந்துள்ள பகுதி) தாலுகா வளர்ச்சிப் பணிகளின் துணை அதிகாரி கிஷோர் வர்னா, “இந்தக் குடிசைவாசிகள் நகரத் திட்டமிடல்களில் ஒன்றின் கீழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதனால்தான் அவர்களுக்குக் குடிசையை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் ட்ரம்ப் வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். ட்ரம்ப் வருகையால் அகமதாபாத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.