மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (23). இவரின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரின் தாய் ரத்னா தனியாளாக சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கணவர் இறந்த பிறகு உறவினர்கள் எந்தவித நல்ல காரியங்களுக்கும் ரத்னாவை அழைக்கவில்லை.
இது குறித்து யுவராஜ் கூறுகையில், ``எனக்கு 18 வயதாக இருந்தபோது என் அப்பா இறந்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த மரணத்தால் என் அம்மா மிகவும் பாதிக்கப்பட்டார். தனியாளாகப் போராடினார். அதோடு சமுதாய ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்.
என் அப்பா இறந்த பிறகு சமூக நிகழ்ச்சிகளுக்கு என் அம்மாவை அழைப்பது மிகவும் குறைந்தது. இது அவருக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தில் என் அம்மா மட்டுமே சம்பாதிப்பவராக இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூடப் பேசுவதில்லை. சுமைகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள அவருக்குத் துணை தேவை என்பதை உணர்ந்தேன்.

மனைவி இறந்தால் ஆண்கள் வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த சமுதாயம், பெண்களுக்கும் அது போன்று ஏன் நினைக்கவில்லை என்று நினைத்தேன். என் அம்மாவை மறுமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைப்பது என்று முடிவு செய்தேன். இதற்காக எனது சமுதாயம் மற்றும் உறவினர்களை சம்மதிக்க வைத்தது எளிதான ஒன்றாக இல்லை. என் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மூலம் என் அம்மாவுக்கு ஏற்ற துணையைத் தேடினேன். அதிர்ஷ்டவசமாக மாருதி கணவத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. என் அம்மாவிடமும், மாருதியிடமும் பேசி திருமணத்தை முடிவு செய்தோம். என் அம்மாவுக்கு ஏற்ற துணையை தேடிக்கண்டுபிடித்த அந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாகும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து மாருதி கணவத் கூறுகையில், ``கடந்த சில ஆண்டுகளாக நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். ரத்னாவை சந்தித்துப் பேசிய பிறகு, அவரின் குடும்பத்துடன் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று நினைத்தேன். ரத்னாவுக்கு மறுமணம் தொடர்பாக முடிவு எடுப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. இறந்துபோன கணவரை மறக்க அவர் தயாராக இல்லை என்று தெரிவித்தார்’' என்றார்.
ரத்னா இதுபற்றி கூறுகையில், ``ஆரம்பத்தில் இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என் கணவரை மறக்க நான் தயாராக இல்லை. என்னிடம் இது குறித்து பேசிய பிறகு, வாழ்நாள் முழுக்க தனியாக வாழ வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக்கொ ண்டேன். பிறகுதான் சம்மதித்தேன்’ என்றார்.
ரத்னாவுடன் மாருதிக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மகனே ரத்னாவின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வாட் என்ற கிராமத்தில், கணவர் இறந்துபோனால் பெண்களுக்கு செய்யப்படும் சடங்குகளுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. உடனே அதே நடைமுறையை மாநிலம் முழுவதும் பின்பற்றும்படி மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.