பாலியல் தொல்லையால் உயிரிழந்த சிறுமி: அரசை கண்டித்து வெடித்த போராட்டம்! | The girl died on sexual harassment: protest broke against the government

வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (02/05/2015)

கடைசி தொடர்பு:08:39 (02/05/2015)

பாலியல் தொல்லையால் உயிரிழந்த சிறுமி: அரசை கண்டித்து வெடித்த போராட்டம்!

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் தாய் மற்றும் 16 வயது மகளுக்கு ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டதில் சிறுமி பலியானார். இந்த சம்பவத்திற்கு, பஞ்சாப் அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பேரணியாக சென்றனர். அவர்கள், பிரகாஷ் சிங் பாதலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் வெட்கக்கேடானது என்றும் குரல் எழுப்பினர். மேலும், அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளையும் பேரணியில் சென்ற பெண்கள் ஏந்திச் சென்றனர்.

இதேபோல், உயிரிழந்த சிறுமியின் சொந்த ஊரான மோகாவில் ஏராளமான இளைஞர்களும், ஆண்களும் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, தாயும், மகளும் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட சம்பவம் நடந்த பேருந்து, பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலுக்கு சொந்தமானது என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

பிரகாஷ் சிங் பாதல், அவரது மருமகளும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், அரசு வழங்கிய இழப்பீட்டை உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதாகவும் பஞ்சாப் அரசு அளித்த உறுதிமொழியை அந்த சிறுமியின் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர்.

பாதல் குடும்பத்தினரால் நடத்தப்படும் ஆர்பிட் ஏவியேசன்ஸ் பேருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் பெர்மிட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்