67 சதவீத சிறுமிகள் கருக்கலைப்பு: மும்பை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

மும்பை: கடந்த ஆண்டு கருக்கலைப்பு செய்த பெண்களில் 15 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பெண்களின்  எண்ணிக்கை 67 சதவீதமாக மும்பையில் அதிகரித்துள்ளது என்று அம் மாநகராட்சி சுகாதாரத்துறைத்  தகவல் தெரிவித்து உள்ளது.

மும்பையில் கருக்கலைப்பு செய்த பெண்களின் விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தது.இது பற்றி  மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்,

" மும்பையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 31 ஆயிரம் பெண்கள் கருக்கலைப்பு செய்து உள்ளனர். இதில் 9 ஆயிரத்து 847 பேர் 25 முதல் 29 வயதுடையவர்கள் ஆவர். இதேபோல் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 7 ஆயிரத்து 353 பேர் கருக்கலைப்பு செய்து உள்ளனர். கருக்கலைப்பு செய்தவர்களில் 1,600 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இது கடந்த 2013–14 ஆண்டை விட 47 சதவீதம் அதிகம் ஆகும்.

அதே போல் 15 வயதுக்குட்பட்ட 185 பெண்கள் கருக்கலைப்பு செய்ததாக மாநகராட்சி அதிர்ச்சித்  தகவலை வெளியிட்டு உள்ளது. இது கடந்த 2013–14 ஆண்டை விட 67 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2013–14 ஆம் ஆண்டுகளில் 15 வயதுக்குட்பட்ட 111 பெண்கள் கருக்கலைப்பு செய்ததாகக்  தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது, ‘‘ தொடர்ந்து நடந்து வரும் குழந்தைகள் திருமணம் மற்றும் பெண்களிடம் பாலியல் உறவு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே சிறுமிகள் கருக் கலைப்பு அதிகரிப்பதற்கு காரணம். இதை குறைக்க பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்’’ என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!