சூரிய நமஸ்காரம் பிடிக்கவில்லையா? கடலில் போய் விழுங்கள்: பா.ஜ.க. எம்.பி.!

வாரணாசி: சூரிய நமஸ்காரம் பிடிக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் இருட்டறையில் அடைந்து கிடக்க வேண்டும் அல்லது கடலில் போய் விழுந்து மூழ்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. தெரிவித்து இருக்கும் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், நாடு முழுவதும் பல இடங்களில் யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், சூரிய நமஸ்காரத்துக்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சூரிய நமஸ்கார பயிற்சியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், யோகா பயிற்சியில் ஈடுபடுவது கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர் போன உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத், வாரணாசி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ''நாம் வாழ்வதற்கான சக்தியின் ஆதாரமே சூரியன்தான். சாதி, மதம், இனம் பார்க்காமல், எல்லோருக்கும் சூரிய கடவுள் ஒளியை அள்ளி வழங்கி வருகிறது. அத்தகைய சூரியனை மதத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பவர்களின் மனநிலையை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் சூரிய ஒளியையோ, வெப்பத்தையோ பயன்படுத்தக்கூடாது. வாழ்நாள் முழுவதும் இருட்டறையில் அடைந்து கிடக்க வேண்டும் அல்லது கடலில் போய் விழுந்து மூழ்க வேண்டும்" என்று கூறினார்.

தற்போது யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டு கட்சி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், யோகி ஆதித்யநாத்தின்  இத்தகைய கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!