வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (11/06/2015)

கடைசி தொடர்பு:12:59 (11/06/2015)

சதி செய்தே முன்னுக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு: போட்டு தாக்கும் சந்திரசேகர ராவ்!

ஹைதராபாத்: சதி செய்தே அரசியலில் முன்னுக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி உள்ளார்.

எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் ஹைதராபாத்தில் செய்தியாளார்களிடம் கூறும்போது, ''தெலங்கானா மேல் சபைக்கு ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டுமானால் அவருக்கு 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். 10 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, இதில் எப்படி வெற்றி பெற முடியும். இதை நன்கு தெரிந்து இருந்தும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் வேட்பாளரை நிறுத்தினார்.

முதலில் அவர் பணம் கொடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்தார். நாங்கள் உஷார்படுத்தியதால், காங்கிரஸ் கட்சி தன் எம்.எல்.ஏ.க்களை ஒரு பங்களாவில் தங்க வைத்துவிட்டது. அடுத்து அவர் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் பண ஆசை காட்டுவார் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். அது போலவே, அவர் எங்கள் நியமன எம்.எல்.ஏ.க்கு லஞ்சம் கொடுக்க முயன்று சிக்கியுள்ளார். பட்டப்பகலில் அவர் கையும் களவுமாக திருடன் போல சிக்கியுள்ளார். அவர் அரசியலுக்கு வந்த நாளில் இருந்தே இப்படி திருட்டுத்தனமாக சதிகள் செய்தே முன்னுக்கு வந்துள்ளார்.

இப்போது, ஓட்டுக்கு நோட்டு கொடுத்து லஞ்ச, ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதில் இருந்து சந்திரபாபு நாயுடு தப்பிக்க, டெல்லிக்கு ஓடி போய் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். எம்.எல்.ஏ.க்கே லஞ்சம் கொடுத்த இந்த மாதிரி திருடன்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யாது என்று நம்புகிறேன். அவரை கைது செய்தால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி அரசு கவிழ்ந்து விடும் என்கிறார். எங்கள் ஆட்சியை கவிழ்க்க இவர் என்ன ஜனாதிபதியா? நாங்கள் இம்மாநிலத்தில் சுதந்திரமாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளோம். இவர் மாதிரி ஊழல் செய்ய வில்லை.

சந்திரபாபு நாயுடு, தனது தொலைபேசியை நாங்கள் ஒட்டு கேட்பதாக சொல்கிறார். நாங்கள் எந்த சதியும் செய்யவில்லை. அவர் லஞ்சம் கொடுப்பது பற்றி பேசிய உரையாடலை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். எனவே சட்டம் தன் கடமையை செய்கிறது. இதில் பயந்துபோயுள்ள சந்திரபாபு நாயுடு, ஜனநாயக முறையில் தேர்வான ஒரு ஆட்சியை கலைத்து விடுவேன் என்று ஆணவமாக பேசுகிறார். அவரது இந்த பேச்சை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சந்திரபாபு நாயுடு பக்கத்து மாநிலத்து முதல்வர் அவ்வளவுதான். அவர் விருந்தாளி மாதிரிதான் ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். சந்திரபாபு நாயுடுவோ, அவர் மாநில டி.ஜி.பி.யோ இங்கு அதிகாரம் செய்ய முடியாது. அவர்கள் அதிகாரம் காட்டுவதை ஆந்திராவுக்குள் வைத்துக்கொள்ளட்டும். தெலங்கானாவுக்குள் வந்து அதிகாரம் செய்யக் கூடாது. சந்திரபாபு நாயுடு இதுபோல் நிறைய சட்ட விரோத செயல்களை செய்துள்ளார். அவை விரைவில் வெளிவரும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி முடிந்ததும் வழக்குகள் பதிவு செய்யப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்