Published:Updated:

`தமிழக அரசு இமெயில் அனுப்பினால்தான் விடுவார்கள்!’ - மகாராஷ்டிராவில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்

தவிப்பு
தவிப்பு

தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றிச் சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு தண்ணீர், உணவு, மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.

``தமிழகத்திலிருந்து அகமதாபாத்துக்கு ஜவுளி ஏற்றிச் சென்ற லாரிகள் லாக் டௌனில் மாட்டிக்கொண்டது. அதையடுத்து 48 லாரி டிரைவர்கள் சேர்ந்து வேனில் ஊர் திரும்பி வரும்போது மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போலீஸார் பிடித்துத் தனிமைப்படுத்தினர். 17 நாள்கள் கடந்தும் எங்களை விடாமல் அலைக்கழித்து வருவதால் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைத் தமிழக அரசு மீட்க வேண்டும்'' என்று இவர்கள் கனத்த குரலில் கெஞ்சும் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இது தமிழக லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ
வீடியோ

இதுபற்றி லாரி டிரைவர் காவேரி, ''நான் கடந்த மாதம் சேலம் மாவட்டம் சங்ககிரியிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஜவுளி லோடு ஏற்றி வந்தேன். 27 -ம் தேதி சரக்கை இறக்கும்போது மாநில அரசு உத்தரவின்படி 14 நாள்கள் கழித்துதான் சரக்கை இறக்க வேண்டுமென்று கூறிவிட்டார்கள். அதையடுத்து திரும்பி வர முயன்றோம். என்னைப்போல தமிழகத்தைச் சேர்ந்த பல லாரி டிரைவர்களும் தவித்து வந்தார்கள்.

காவேரி
காவேரி

தமிழகத்தைச் சேர்ந்த 48 லாரி டிரைவர்கள் வாட்ஸ் அப் மூலமாக ஒன்றிணைந்தோம். பிறகு, 28-ம் தேதி மதியம் சுமார் 12 மணிக்கு ஒரு வேனில் 48 பேரும் அகமதாபாத்திலிருந்து கிளம்பினோம். 700 கி.மீட்டர் பயணித்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் வந்தோம். புனேவை தாண்டி 50 கி.மீட்டர் சதாரா மாவட்டத்துக்குள் வரும்போது போலீஸார் எங்களை மடக்கிப் பிடித்தார்கள்.

பிறகு, எங்களை சதாரா மாவட்டம் சிறுவல் என்ற பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் தனித்திருக்க சொன்னார்கள். 14 நாள்கள் கழித்து அனுப்பிவிடுவதாகவும் கூறினார்கள். அதையடுத்து நாங்களும் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு 14 நாள்கள் கழித்தது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால், 17 நாள்கள் ஆகியும் எங்களை அனுப்பவில்லை.

காந்தி
காந்தி

இங்கு சாப்பாட்டுக்கு ரொம்ப சிரமப்படுகிறோம். காலையில் அவலும் மதியம் மற்றும் இரவில் ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் சாப்பாடு தருகிறார்கள். இது எங்களுக்குக் கொஞ்சமும் பற்றவில்லை. மாற்றுத் துணிகூட இல்லாமல் தவிக்கிறோம். எங்களால் இங்கு கொஞ்ச நேரம்கூட இருக்க முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கெஞ்சினால், தமிழக அரசு உங்களை அனுப்புமாறு இமெயிலில் கடிதம் அனுப்பினால் மட்டுமே விடுவதாகக் கூறுகிறார்கள். அதனால் தமிழக அரசு எங்கள் மீது கருணைக் கொண்டு விடுவிக்குமாறு கடிதம் அனுப்பி உதவி செய்ய வேண்டும். நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து 14 நாள்கள் தனித்திருக்கிறோம்'' என்றார்.

லாரி டிரைவர் காந்தி, ``நான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னிகுத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். 17 நாள்களாக மகாராஷ்டிராவில் தவித்து வருகிறோம். நான் வீட்டுக்குச் செல்லாததால் வயதான என் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோரும் அழுது புலம்புகிறார்கள். அவர்களுக்குச் சாப்பாட்டு செலவுக்குக்கூட காசு இல்லாமல் புலம்புகிறார்கள். நான் வீட்டுக்குச் சென்றால்தான் ஆறுதலாக இருக்கும். தமிழக முதல்வர் எங்களைத் தமிழ்நாடு அழைத்து வர உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

சென்னகேசவன்
சென்னகேசவன்

இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் சென்னகேசவன், ''தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றிச் சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு தண்ணீர், உணவு, மாற்று உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைத் தமிழகம் கொண்டு வர தமிழக முதலமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாகக் கேட்டுக்கொள்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு