முதல் சர்வதேச யோகா தினம்: இந்தியர்கள் கின்னஸ் சாதனை! | India sets new Guinness world record on International Yoga Day

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (21/06/2015)

கடைசி தொடர்பு:17:40 (22/06/2015)

முதல் சர்வதேச யோகா தினம்: இந்தியர்கள் கின்னஸ் சாதனை!

புதுடெல்லி: டெல்லியில் நடந்த முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், ‘‘யோகாவுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஜூன் 21 ஆம் தேதியை ‘சர்வதேச யோகா தினமாக' ஐ.நா. சபை அறிவித்தது.

இந்நிலையில், இன்று (21ஆம் தேதி) 192 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இன்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், டைம்ஸ் சதுக்கத்திலும் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

இந்தியாவிலும், யோகா நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை டெல்லியில் ராஜபாத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா குரு ராம்தேவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், நடிகர், நடிகைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி ராஜ்பாத் சாலை, யோகா பாதையாக மாறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யோகா மனித மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால், சிலர் இதை உடற்பயிற்சியாக பார்க்கின்றனர். இது பெரிய தவறு.

நாம் இன்று யோகா தினத்தை மட்டும் கொண்டாடவில்லை. அமைதிக்கான புதிய சகாப்தத்தை தொடங்க அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது மனித இனத்தின் நன்மைக்கானது, பதட்டமற்ற உலகத்திற்கானது, இந்த நிகழ்ச்சியானது அமைதியை பரப்பும்'' என்றார்.

கின்னஸ் சாதனை

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 29,973 பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், இன்று டெல்லியில் நடந்த முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்