Published:Updated:

`18 மணி நேரப் போராட்டம்; பத்திரமாக மீட்கப்பட்ட மக்கள்’ - வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினர்!

வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்கள்
வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டிருக்கும் வேளையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சாங்கிமுல்லா பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்குள்ள வீட்டில் இருந்த பொதுமக்கள் சிலரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லும் தகவலும் உளவுத்துறையின் மூலம் ராணுவத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினரும் ராணுவத்தினரும் அந்தப்பகுதிக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராணுவம்
ராணுவம்

பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருந்த பகுதிக்குள் நுழையும் கூட்டு நடவடிக்கையை ராணுவத்தினரும் காவல்துறையினரும் தொடங்கினர். பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த பொதுமக்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது கர்னல் அசுதோஷ், மேஜர் அனுஜ் சூத், வீரர்கள் ராஜேஷ், தினேஷ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் முகமது ஃகுவாசி ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி

ராணுவம் தரப்பில், `உளவுத்துறை தகவலையடுத்து ராணுவம் மற்றும் ஜம்மு காவல்துறை கூட்டு நடவடிக்கையை தொடங்கியது. டார்க்கெட் செய்யப்பட்ட பகுதிக்குள் 5 ராணுவத்தினர் மற்றும் போலீஸார் அடங்கிய குழு விரைந்தது. டார்க்கெட் செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லும்போதே அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் வசம் இருந்த பிணையக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது.

ராணுவம்
ராணுவம்

சனிக்கிழமை மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய துப்பாக்கிச்சண்டை ஞாயிறு காலை வரை தொடர்ந்தது. மாட்டுத்தொழுவத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் உயிரிழந்ததையடுத்து சண்டை நிறுத்தப்பட்டது. கர்னல் அசுதோஷ், மேஜர் அனுஜ் சூத், வீரர்கள் ராஜேஷ், தினேஷ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் முகமது ஃகுவாசி ஆகியோரின் உடல்கள் காலையில் மீட்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``பயங்கரவாதிகள் காட்டுப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக விளக்குகளை அந்தப்பகுதியில் பொருத்தியிருந்தோம். சூழ்நிலை சாதகமாக இல்லாமல் போய்விட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மற்ற பாதுகாப்பு படையினருடனான தொடர்பு துண்டித்ததால் அந்தக்குழுவினர் மட்டும் பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் சூழல் ஏற்பட்டது. கடுமையான மழை மற்றும் இடியின் காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது” என ஜம்மு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினர் உடல்கள்
வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினர் உடல்கள்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மேஜர் அனுஜ் சூத் தந்தை பேசுகையில், ``அவர் ஓர் உயர்ந்த தியாகத்தைச் செய்துள்ளார். இது அவரது கடமையின் ஒரு பகுதியாகும். இதற்காக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதால் அந்தப்பெண்ணை நினைத்துதான் எனக்கு கவலையாக இருக்கிறது. பலரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத்தானே இறந்தார்” என வருத்தத்துடன் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு