Published:Updated:

நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் கார் விபத்தில் பலி!

இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய போது, நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஹரியானா சென்றிருக்கின்றனர். அங்கு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு விட்டு, பாட்னாவுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, பாட்னா வரும் வழியில் பிப்ரா என்ற இடத்தில், அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில், காரில் இருந்த டிரைவர் உட்பட சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

இந்த விபத்து தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``டாடா சுமோ காரில் டிரைவர் உட்பட மொத்தம் 10 பேர் பயணம் செய்திருக்கின்றனர். அந்த கார் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியிருக்கிறது. அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் ஒருவரான லலித் சிங், நடிகர் சுஷாந்த் சிங்கின் மைத்துனர் ஆவர். சுஷாந்த் சிங்கின் மற்றொரு மைத்துனர் ஓம்பிரகாஷ் சிங் ஹரியானாவில் மூத்த போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஓம்பிரகாஷ் சகோதரிதான் ஹரியானாவில் இறந்துவிட்டார். அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு, பிகாரில் உள்ள சொந்த ஊருக்கு வந்த போது தான் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது" என்றனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: ஓராண்டு ஆகியும் விலகாத மர்மம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு