Published:Updated:

`3 மாதப் பிரிவு; டெல்லி டு பெங்களூரு’ - தாயைப் பார்க்க விமானத்தில் தனியாகப் பயணித்த 5 வயதுச் சிறுவன்

விஹான்
விஹான் ( ANI )

ஊரடங்கு காரணமாக டெல்லியில் சிக்கிய 5 வயதுச் சிறுவன் இன்று விமானத்தில் தனியாகப் பயணித்து பெங்களூரு வந்தடைந்துள்ளான்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாகக் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை இங்கு 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்ததால் அனைத்துத் தொழில்களும் முடங்கி நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு.

விமான நிலையம்
விமான நிலையம்
ANI

அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த விமான சேவை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே இன்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானத்திலும் விமான நிலையத்திலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகளும் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக வெளி மாநிலங்களில் சிக்கியிருந்து தங்கள் குடும்பத்தினர், அன்புக்குரியவர்களைப் பார்க்காமலிருந்த பலரும் இன்றைய விமானச் சேவையைப் பயன்படுத்தி மீண்டும் ஊருக்குத் திரும்பி வருகின்றனர். சென்னையில் சிக்கியிருந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 5 வயதுச் சிறுவன் ஒருவன், தனியாகப் பயணித்து டெல்லியிலிருந்து பெங்களூரு வந்தடைந்துள்ளான்.

பெங்களூரு
பெங்களூரு
ANI

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள தன் தாத்தா வீட்டுக்குச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விஹான் சர்மா, ஊரடங்கால் அங்கேயே சிக்கி கடந்த 3 மாதங்களாகத் தன் தாயை விட்டுப் பிரிந்து தவித்து வந்துள்ளான். இதற்கிடையில் இன்று விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் சிறப்பு வசதியில் டெல்லியிலிருந்து தனியாக விமானத்தில் பயணித்து பெங்களூரு வந்தடைந்துள்ளான். இன்று காலை 9 மணிக்கு கெம்பகௌடா விமான நிலையம் வந்த சிறுவனை அவரின் தாய், வந்து அழைத்துச் சென்றார்.

தொடங்குகிறது ரயில் சேவை... பாதுகாப்பான பயணத்துக்கு என்ன செய்ய வேண்டும்? #ExpertOpinon

கையில் கிளவுஸ், முகமூடி, பயண பாஸ், சிறப்பு வசதி அதனுடன் கையில் செல்போனுடன் பெங்களூரு வந்து இறங்கியுள்ளார் சிறுவன் விஹான். செல்போன் மூலம் அவரது குடும்பத்தினர் சிறுவனுக்குத் துணையிருந்து வழிகாட்டி அவரை பெங்களூரு வரை தனியாகப் பயணிக்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு