பாகிஸ்தான் டு இந்தியா, பல ஆண்டுகள் போராட்டம்... இறுதியாக தன் பெற்றோருடன் இணைந்த கீதா!
2015-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியா அழைத்துவரப்பட்ட கீதா, ஐந்து ஆண்டுகள் தேடி, தற்போது தன் பெற்றோரைக் கண்டடைந்துள்ளார்!
கீதா என்னும் சிறுமி தன் 11-வது வயதில் இந்தியாவில் இருந்து வழிதவறி பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு `எதி' அறக்கட்டளை என்னும் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் இருந்துள்ளார். 2015-ம் ஆண்டு மீண்டும் இந்தியா அழைத்துவரப்பட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தன் பெற்றோரைத் தேடி வந்தார். தற்போது அவர்களைக் கண்டடைந்தும் விட்டார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா திரும்பியது முதல், பாகிஸ்தானில் தன்னை மகள்போல வளர்த்த `எதி' நிறுவனத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார் கீதா. `எதி' நிறுவனர் பில்கியூஸ் எதி, பாகிஸ்தான் செய்தி நிறுவனத்திடம், கீதா அவரது குடும்பத்தினர் உடன் சேர்ந்துள்ள நற்செய்தியை கூறியுள்ளார். ``கீதா என்னுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நைகான் கிராமத்தில் அவரின் தாயைக் கண்டடைந்துள்ளார்" என அவர் தெரிவித்தார்.
காது கேளாத, வாய் பேச முடியாத சிறப்பு குழந்தையாக தனது 11-வது வயதில் தவறுதலாக பாகிஸ்தான் சென்றுள்ளார் கீதா. அவரை தனியாக கராச்சி ரயில் நிலையத்தில் கண்ட பில்கியூஸ் எதி, கீதாவை தன் குழந்தையாக எண்ணி வளர்த்து வந்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு ஃபாத்திமா எனப் பெயரிட்ட எதி, குழந்தை காலில் விழும் பழக்கம் ஆகியவற்றை கவனித்து அவள் இந்து என தெரிந்து கொண்டு கீதா எனப் பெயர் வைத்துள்ளார். ஜின்னா சாலையில் உள்ள ஶ்ரீ சுவாமி நாராயண கோவிலில் கீதா தினமும் வழிபடுவது வழக்கம். அதனால் கீதா தனியாக வழிபட சிலைகளையும் ஹிந்தி புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார் எதி. கீதாவால் பேச முடியாத போதிலும் சைகை மொழியில் அவருடன் தடுமாற்றம் இன்றி பேசியுள்ளார்.
2015-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கீதாவின் வழக்கை தீவிரமாக ஆராய்ந்து அவரை இந்தியா அழைத்து வரச் செய்தார். கீதாவை அவரது குடும்பத்தினருடன் சேர்க்க எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்து, ஐந்து ஆண்டுகள் கழித்து, தற்போது கீதா தன் அம்மாவை கண்டடைந்துள்ளார். கீதாவின் தாய் அவர்தான் என்பது டி.என்.ஏ சோதனை மூலம் உறுதியாகியுள்ளது.
கீதாவின் தந்தை இறந்துவிட்டார். அவரின் தாய் மறுமணம் செய்துள்ளார். கீதாவிற்கு சிறு வயதில் அவரின் தாய் வைத்த பெயர் ராதா.
கீதாவின் குடும்பம், களிமண் பானைகள் செய்யும் சாதாரண குடும்பம். தற்போது எட்டாம் வகுப்புப் படிக்கும் கீதாவின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து எதி கவலை தெரிவித்துள்ளார். ``அவள் இப்போது வேறொரு நாட்டில் வசிக்கக்கூடும். எனினும் அவள் என் மகள்தான். எங்களுக்கிடையில் பல மைல்கள் தூரம் இருந்தபோதிலும் அவள் என்னுடன் எல்லா சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகொள்கிறாள். அவள் தனக்காக எடுக்கும் எந்த முடிவிலும் நான் அவளுடன் இருப்பேன்'' என்று எதியின் மனைவி கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து கீதா தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார். நாடு, மதம், பிரிவினைகள் கடந்து கீதாவை வளர்த்து வந்த எதி தம்பதிக்கு நன்றிகள் தெரிவித்து வருகிறார்கள் பலரும்.