Published:Updated:

`கொரோனாவிலிருந்து மீண்டு 14 முறை பிளாஸ்மா தானம்; இன்னும் தொடர்வேன்!' - ஆச்சர்யப்படுத்தும் புனே வாசி

அஜய்
அஜய் ( Facebook Image )

இந்தியாவிலேயே அதிக முறை பிளாஸ்மா தானம் செய்தவர் என்று அஜய் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். இந்த பிளாஸ்மா மூலம் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். ஆனால், இது அதிகம் பயன்தருவதில்லை என இந்திய விஞ்ஞானிகள் இந்தப் பிளாஸ்மா தெரபியை ஊக்குவிப்பதில்லை. இருந்தும் சில மருத்துவமனைகளில் இந்த தெரபி இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா நாட்டில் உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பலரும் உறவினர்களுக்காக பிளாஸ்மா கொடையாளிகளைத் தேடி வருகின்றனர். ஆனால், அனைவருக்கும் கொடையாளிகள் கிடைப்பதில்லை. மேலும் பிளாஸ்மா தானம் செய்யவும் அதிகமானவர்கள் முன்வருவதில்லை. ஆனால், புனேயைச் சேர்ந்த ஒருவர், தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பிளாஸ்மா தானம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புனேயைச் சேர்ந்த அஜய் என்பவருக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்துக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் சிகிச்சை முடிந்து வெளியில் வந்த பிறகு, அதிகமானவர்கள் பிளாஸ்மா தானம் தேவை என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்ததைப் பார்த்தார். கொரோனாவில் இருந்து சிகிச்சை முடிந்த 28 வது நாள், முதன்முறையாக பிளாஸ்மா தானம் செய்தார் அஜய். அதன் பிறகு தொடர்ச்சியாக பிளாஸ்மா தானம் செய்ய ஆரம்பித்தார்.

அஜய்
அஜய்
Facebook Image

இது குறித்து அஜய் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், ``கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை 14 முறை பிளாஸ்மா தானம் செய்திருக்கிறேன். இன்னும் தானம் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் பலவீனமாக இருப்பதாகக் கருதவில்லை. தொடர்ந்து 14 முறை பிளாஸ்மா தானம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், என்னைப்போல் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா கொடுக்கத் தயங்கும் எண்ணத்தை போக்க முடிந்தது.

பிளாஸ்மா தானம் கொடுத்தால் பலவீனமடைவர் மற்றும் நோய்வாய்ப்படுவர் என்றும் தவறான தகவல் நிலவுகிறது. பிளாஸ்மா தானம் என்பது ரத்த தானம் கிடையாது. பிளாஸ்மா, ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பிளாஸ்மா தானம் செய்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நான் 14 முறை பிளாஸ்மா தானம் அளித்த பின்னரும், மீண்டும் தானம் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

இவர் பிளாஸ்மா தானம் செய்த சஹாயத்ரி மருத்துவமனையின் டாக்டர் பூர்ணிமா ராவ் இது குறித்து கூறுகையில், ``பிளாஸ்மா தானம் கொடுப்பதால் அதைக் கொடுப்பவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மாறாக அவருக்கு புதிய ரத்த செல்கள் உருவாகும். எனவே, பொதுமக்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

Plasma treatment (Representational Image)
Plasma treatment (Representational Image)

இந்தியாவிலேயே அதிக முறை பிளாஸ்மா தானம் செய்தவர் என்று அஜய் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

அஜய் தனது தொலைபேசி எண்ணை பிளாஸ்மா தானம் செய்பவர்கள் பட்டியலில் பதிவு செய்து வைத்துள்ளார். மகாராஷ்டிராவில் இப்போது புனேயில்தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு