தன் 50 வயது தாய்க்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. திருமணத்தால் தன் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டதாக, மகள் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் தீபார்த்தி ரியா சக்கரவர்த்தி. இவரின் குடும்பம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வசித்து வந்தது. இவர் இரண்டு வயதாக இருந்தபோதே, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் தன் தந்தையை பறிகொடுத்தார். அப்போது அவரின் தாய் மோசுமிக்கு வயது 25.

இதனிடையே, குடும்ப உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் மோசுமி, மகள் தீபார்த்தி சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சென்றார். அங்கு பாட்டி, தாயின் அரவணைப்பில் தீபார்த்தி வளர்த்து வந்தார். விவரம் புரியத் தொடங்கியதும் தன் அம்மா பட்ட கஷ்டங்களை எண்ணி தீபார்த்தி கவலையடைந்தார். மேலும், தனிமை தன் அம்மாவின் மனதைப் பாதித்து வருவதை உணர்ந்து, அவரை மறுமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், மகளின் எதிர்காலம் கருதி, இதை அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில், மகளின் தொடர் வற்புறுத்தலை அடுத்து திருமணம் செய்துகொள்ள மோசுமி சம்மதித்தார். கடந்த மார்ச் மாதத்தில் மோசுமி தன் 50வது வயதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வபான் என்பவரை மறுமணம் செய்துகொண்டுள்ளார். ஸ்வபானுக்கும் வயது 50 தான் ஆகிறது; இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தத் தகவல்களை, மகள் தீபார்த்தி தனது சமூகவலைதளப் பதிவில் மகிழ்வோடு பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``என் அம்மா தனிமையில் இருந்ததை எண்ணி பல நாள்கள் வருத்தப்பட்டதுண்டு. மறுமணம் செய்துகொள்ளும்படி பலமுறை அவரிடம் கேட்டுக்கொண்டும் மறுத்து வந்தார். அதற்காக பல முறை அவரின் மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறேன். இறுதியில் ஒருவழியாக சம்மதித்தார். இப்போது என் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி.