வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (03/08/2015)

கடைசி தொடர்பு:16:42 (03/08/2015)

ஆபாச இணையதளங்கள் முடக்கம்:மத்திய அரசு அதிரடி!

புதுடெல்லி: இந்தியாவில் ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து  இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.

நாடு முழுவதும்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்கள் முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்று நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபாச இணையதளங்களை  முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை இன்னும் நடந்துவருகிறது.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து தன் உத்தரவில்,

" இது தொடர்பாக நீதிமன்றம்  என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும்.இதில் மத்திய அரசு தான் தலையிட வேண்டும். நான்கு அறைகளுக்குள் இருந்தவாறு, ஒருவர், செக்ஸ் இணையதள காட்சிகளைப் பார்க்கிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது? செக்ஸ் இணையதளங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 21ஆவது பிரிவு வழங்கும் தனி நபர் உரிமையை மீறும் செயலாக அமைந்து விடும்" என்று தெரிவித்து இருந்தார்.

`போர்ன்ஹப்` என்ற ஆபாச இணையதளம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில்,

"உலகம் முழுவதும் எங்களின் இணையதளம் நாள்தோறும் 1,400 முறை திறந்து பார்க்கப்படுகிறது. அதில், 40 சதவீதம், இந்தியாவிலிருந்து நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான், எங்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள். அதற்கு அடுத்த இடத்தில், டெல்லியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.மேலும்  இந்தியாவில் செக்ஸ் இணையதளங்களைப் பார்க்க விரும்புபவர்கள் நடிகை சன்னி லியோனின் செக்ஸ் வீடியோ காட்சிகளைப் பார்க்கவே ஆசைப்படுகின்றனர். இவர் கனடாவில் பிறந்த இந்தியர். சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.குறிப்பாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்கள், வோடபோன், ஹாத்வே, ஏ.சி.டி., போன்ற தனியார் மற்றும் பன்னாட்டுத் தொலை தொடர்பு நிறுவனங்களில் வெளிவந்து கொண்டிருந்த ஆபாச இணையதளங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.

ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது  சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் போல இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இணையதளங்கள்  சிக்கியுள்ளதாக மத்திய அரசுமீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்