மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மத்திய அரசு வழக்கு!

புதுடெல்லி: மேகி நூடுல்ஸ் நிறுவனத்திடம் 640 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருள் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நுகர்வோர் விவகார அமைச்சகம், நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது,  தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பு ஆணையத்தில் 640 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று  வழக்கு தொடர்ந்து உள்ளது.

நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகள், போலி லேபிள்கள் பயன்படுத்துதல், தவறான விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய நுகர்வோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு  தொடரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நுகர்வோர் சட்டம் 12 (1டி) பிரிவின் கீழ் இந்த புகார் கூறப்பட்டு உள்ளது.

இந்த பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகளும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்ற போதிலும், கடந்த 30 வருடங்களில் இந்த சட்டத்தில் நுகர்வோர்தான் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுதான் முதல்முறையாக மத்திய அரசு இந்த சட்டத்தில், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!