பெங்களுரு சாலையில் அனகோண்டா! | Anaconda on Bangalore Road

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (12/08/2015)

கடைசி தொடர்பு:13:12 (12/08/2015)

பெங்களுரு சாலையில் அனகோண்டா!

ம்ம ஊரில் மேடு பள்ளமான ரோட்டில் மழை நீர் தேங்கி இருந்தால் என்ன செய்வோம்? மெதுவாக ஒதுங்கி செல்வோம், அரசாங்கத்தை திட்டிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்வோம். ஆனால், பெங்களூருவை சேர்ந்த சில ஓவியர்களும், தன்னார்வ குழுக்களும் எடுத்திருக்கும் யுக்தி சற்றே வித்தியாசமானது.

நம்ம பெங்களூரு அமைப்பு என்ற பெயரில் செயல்படும் இவர்கள், தனியாக தங்கள் நகரம் சம்பந்தமான பிரச்னைகளை பொம்மை அனகோண்டா, முதலை, மூழ்கும் மனிதனை கொண்டு எதிர்க்கின்றனர். கடந்த ஜூன் மாதம், பெங்களூரில் உள்ள ஒரு மோசமான சாலையில், முதலை ஒன்றை உருவாக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஓவியர் பாடல் நஞ்சுண்டசாமி.

எவ்வளவு நாள்தான் மனு எழுதி கொடுத்துவிட்டு, நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருப்பது? இன்றைய வைரல் உலகத்திற்கு ஏற்றார் போல, ஒரே காயை நகர்த்தி மக்கள்,  சம்பந்தப்பட்ட அரசாங்க அலுவலர்கள், ஊடகங்கள் என அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் இவர்கள்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை யஷ்வந்த்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் ஏற்பட்டிருந்த ஒரு பள்ளத்தில், பெரிய அனகோண்டா பொம்மையின் வாயில் மனித கை இருப்பது போல இவர்கள் அமைத்திருந்தனர்.

அந்த சாலையில் இருந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காத பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பெரிய அனகோண்டா பாம்பு பொம்மையை அவர்கள் அமைத்திருந்தனர்.

இது தற்போது, பெங்களூரு மகாநகர பாலிகே என்ற நகர சீரமைப்புக்கு பொறுப்பான அரசாங்க அமைப்பை கடும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து நம்ம பெங்களூரு அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த பொம்மையை விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஏன் ஒரு படைப்பாகவும் கூட பார்க்கலாம். ஆனால், இந்த அனகோண்டா பாம்பு பொம்மை மூலமாக மிக ஆழமான செய்தியை உரிய அதிகாரிகளுக்கு உணர்த்த முயற்சித்து இருக்கிறோம்" என்றனர்.

இனியாவது அதிகாரிகள் விரைந்து சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

- ஐ.மா.கிருத்திகா
(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்