வெளியிடப்பட்ட நேரம்: 08:18 (20/08/2015)

கடைசி தொடர்பு:13:27 (20/08/2015)

நகரியில் நடிகை ரோஜா திடீர் கைது!

சித்தூர்:  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 14 ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் உருட்டுக்கட்டையால் அதிகாரி பாலாஜிநாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் நகரி போலீசார் முன்னாள் தலைவர் குமார், சுரேஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, தன் கட்சி தொண்டர்களுடன் நேற்று நகரி நகராட்சி அலுவலகம் முன் ஊர்வலம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு, நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக ரோஜா, திருப்பதியில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களான பாஸ்கர் ரெட்டி, ராமசந்திரா ரெட்டி, ஈஸ்வரி, திப்பாரெட்டி ஆகியோருடன் நகரிக்கு புறப்பட்டு வந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த ஆந்திர மாநில போலீசார், ரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்ற கார்களை துரத்தியபடி சென்றனர். அந்த கார்கள் நகரிக்கு செல்லாமல் திடீரென பள்ளிப்பட்டுக்கு திரும்பின. மதியம் 3½ மணியளவில் நடிகை ரோஜாவின் கார், நகரி ரோட்டில் செல்லாமல் சோளிங்கர் ரோட்டில் சென்றது. அப்போது போலீசார், ரோஜாவின் காரை சோளிங்கர் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகே மடக்கினர்.

அப்போது போலீசார் வந்த வாகனம் மோதியதில், எம்.எல்.ஏ.பாஸ்கர் ரெட்டி காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ரோஜா, ஆந்திர போலீசார் தன் மீது காரை ஏற்றி கொல்ல வந்ததாக தெரிவித்தார். எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி, போலீசார் தன் மீது காரை ஏற்றியதில் காயம் அடைந்ததாக புகார் தெரிவித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர்.

உடனே நடிகை ரோஜா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனது தொண்டர்களுடன் காரில் புறப்பட்டு நகரி சென்றார். அவர் செல்லும் வழியில் சத்திரவாடா என்ற இடத்தில் ஆந்திர மாநில போலீசார், தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற ரோஜாவை கைது செய்தனர். அதன் பின்னர் ரோஜாவை புத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்