எலி கடித்து குழந்தை இறந்த விவகாரம்: மருத்துவர் மாற்றம்; நர்ஸ்கள் சஸ்பெண்ட்!

திருப்பதி: ஆந்திராவில் எலி கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் சிறப்பு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.மேலும்  மற்றும் 2 நர்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாகா - லட்சுமி தம்பதியின் 7 மாத ஆண் குழந்தைக்கு குண்டூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த பச்சிளம் குழந்தையை எலி கடித்துக்  குதறியது. இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எலி கடித்ததால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது என்று தாய் லட்சுமி பலமுறை வார்டு நர்ஸ்களிடம் கூறியும், அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டது.

இந்தச்  சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆர்.எம்.ஓ. சீனிவாசராவ், சுகாதார அதிகாரி சீனிவாசராவ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அலட்சியமாக செயல்பட்டதாக வார்டின் தலைமை நர்ஸ்  விஜயலட்சுமி, நர்ஸ் விஜயநிர்மலா ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் மருத்துவமனை சூப்பிரண்டு வேணுகோபால், குழந்தைகள் பிரிவு டாக்டர் பாஸ்கர்ராவ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மருத்துவமனையில் சுற்றித் திரிந்த எலிகளை அழிக்கும் பணி, கடந்த 2 நாட்களாக நடந்தது. மாவட்ட ஆட்சியர் காந்திலால் தண்டே நேரடி மேற்பார்வையில்,  100 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் எலி வேட்டையில் இறங்கினார்கள். 2 நாளில் 100 க்கும் மேற்பட்ட எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!