'போருக்குத் தயாராகுங்கள்...!' - இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு!

புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில்,  குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.

பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங்  பேசும்போது, "எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்காக நாம் எந்த நேரத்திலும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். தற்போதைய நிலையில் இதுவே நமது யுக்தி.

கடந்த சில ஆண்டுகளில் நமக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நுணுக்கத்தையும் நமது ராணுவம் கூடவே பெற்றுள்ளது. எல்லையில் அவ்வப்போது ஏற்படும் அத்துமீறல்களை வீரர்கள் விழிப்புடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில அமைதியை சீர்குலைக்க புதிய வகையிலான அத்துமீறல்கள்  நடந்துவருகின்றன. அதற்கு சமீபத்திய  சம்பவங்களே எடுத்துக்காட்டு. பொதுமக்களும் நமக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். சாதிய மோதல்கள், வன்முறைகளிலுருந்து மக்களை பாதுகாக்கும் உள்நாட்டு பணியும் சிறப்பாக நடக்கிறது. இவை அனைத்தையும் தாண்டியும் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!