Published:Updated:

`416 பாக்கெட்டுகள்; 50 டெட்டனேட்டர்கள்; 52 கிலோ!’- புல்வாமா வகைத் தாக்குதலைத் தடுத்த ராணுவம்

கைப்பற்றப்பட்ட வெடிபொருள்
கைப்பற்றப்பட்ட வெடிபொருள் ( ANI )

ஜம்மு - காஷ்மீர் நெடுஞ்சாலை அருகில் 52 கிலோ வெடிபொருள்களை இந்திய ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம், புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு நாசச்செயல் தடுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், தற்போது அதேபோன்ற மற்றொரு தாக்குதல் முயற்சியை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

கைப்பற்றப்பட்ட வெடிபொருள்
கைப்பற்றப்பட்ட வெடிபொருள்
ANI

காஷ்மீரின் கரீவா (Karewa) பகுதியில் வெடிபொருள்கள் பதுக்கப்பட்டிருப்பதாக நம் இந்திய ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அவந்திப்போராவை அடுத்த கடிகல் (Gadikhal) கிராமத்தின் வனப்பகுதிகளில் ராணுவத்தினரும் துணை ராணுவப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணி அளவில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில், பழத்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொட்டியில் சுமார் 52 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருந்து 125 கிராம் எடையுள்ள 416 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.

தேடுதல் வேட்டையை இந்திய ராணுவமும் துணை ராணுவப் படையும் தீவிரப்படுத்தியபோது, அதேபோன்ற மற்றொரு சின்டெக்ஸ் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 50 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரியவந்தது. `சூப்பர் 90' அல்லது `எஸ்-90' என்று அழைக்கப்படும் வெடிபொருள்கள் அவை என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தாக்குதலில் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வகை வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு