பி.எஸ்.என்.எல். இணையதள சேவை வேகம் அக்டோபர் முதல் அதிகரிக்கிறது!

குர்கான்: பி.எஸ்.என்.எல். இணையதள சேவை வேகம்  அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கிறது என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தா தெரிவித்து உள்ளார்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவை வேகம் அதிகரித்துள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய செல்போன் வாடிக்கையாளர்களையும், தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. பி.எஸ்.என்.எல்.,  தற்போது குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இணைய தள சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம்,  கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 1.78 கோடி செல்போன் வாடிக்கையாளர்களையும், 20 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து உள்ளது. இதனால் சுமார் ரூ.7 ஆயிரத்து 600 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர, பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலம் குர்கானில் அதிவேக இணையதள சேவை திட்டத்தை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தா கூறும்போது, ''பி.எஸ்.என்.எல். நிறுவன இணையதள சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகரித்து உள்ளோம். அடுத்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்க உள்ளது. கூடுதல் கட்டணம் ஏதுமின்றி,  கூடுதல் வேகத்தில் இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!